கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜித் திப்கேவின் குடும்ப வருமானம் எவ்வளவு என்பது குறித்து உயர்நிலை விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர் அமித் திவாரி மனு அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சம்பாஜிநகரை சேர்ந்தவர் அபிஜித் திப்கே (30). புனேவில் இதழியல் பட்டம் பெற்ற அவர் கடந்த 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றினார்.
பின்னர் கடந்த 2023-ம் ஆண்டில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார். கடந்த 2025-ம் ஆண்டில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த அவர், அமெரிக்காவில் பணிவாய்ப்புகளை தேடிவந்தார்.
கடந்த மே 16-ம் தேதி சமூக வலைதளத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பை அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6-ம் தேதி அவர் இந்தியா திரும்பினார். நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து அபிஜித் திப்கே தலைமையிலான சிஜேபி நடத்திய போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
இந்த சூழலில் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த ஆர்டிஐ சமூக ஆர்வலர் அமித் திவாரி மகாராஷ்டிர அரசு, தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரி வாரியம் ஆகியவற்றில் அபிஜித் திப்கே தொடர்பாக புகார் மனுக்களை அளித்துள்ளார்.
குறிப்பாக மகாராஷ்டிர அரசிடம் அவர் அளித்த மனுவில், “சிஜேபி தலைவர் திப்கேவின் குடும்ப வருமானம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்டிஐ சமூக ஆர்வலர் அமித் திவாரி கூறியதாவது: அபிஜித் திப்கேவின் தந்தை மகாராஷ்டிர அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.65,000 ஆக இருக்கலாம். இந்த வருமானத்தில் அபிஜித் திப்கே அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது. எனவே திப்கேவின் குடும்ப வருமானம் குறித்து மகாராஷ்டிர அரசு உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு.
இந்த அமைப்பு இப்போது அரசியல் கட்சி போன்று செயல்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்து நன்கொடைகளை வசூலித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளேன். மாநிலங்களவை எம்பியும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அண்மையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சட்ட பாதுகாப்பு நிதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நிதிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி மத்திய மறைமுக வரிகள் வாரியத்திடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அமித் திவாரி தெரிவித்துள்ளார்.





