அர்ஜென்டினா மற்றும் ஈரான் இடையே இராஜதந்திர மோதல்

ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் அரசாங்கம், ஈரானின் “பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை” மேற்கோள் காட்டி, அர்ஜென்டினாவில் உள்ள ஈரானிய இராஜதந்திரியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அர்ஜென்டினாவில் உள்ள ஈரானின் தூதரகப் பொறுப்பாளர் மொஹ்சென் சுல்தானி தெஹ்ரானி, 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிபர் மிலேயின் அரசாங்கம் ஈரானிய புரட்சிகர காவலர் படையை (IRGC) ஒரு “பயங்கரவாத அமைப்பு” என்று அறிவித்தது.

“ஆக்கிரமிப்பாளர்களின் பக்கம் நிற்பதன்” மூலம் அர்ஜென்டினா சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்குப் பதிலளித்த அர்ஜென்டினா, ஈரானின் இந்தக் கூற்று “அவமானகரமானது மற்றும் ஆதாரமற்றது” என்று கூறியுள்ளது.

1994-ல் பியூனஸ் அயர்ஸில் உள்ள யூத மையம் (AMIA) மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு ஈரான் ஒத்துழைக்கத் தவறியதையும் இந்த வெளியேற்றத்திற்கான ஒரு காரணமாக அர்ஜென்டினா வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.