இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு செவ்வாய்க்கிழமை (15) மதியம் சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 57 பயணிகள் பயணித்துள்ளனர்.
ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.