ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் நேற்று 31-வது நாளாக நீடித்தது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சார்ந்த 20 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலவந்தி வழியாக கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியிருக்கிறது.
அமெரிக்கா, ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும். தற்போதைய சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளில் தாக்குதலில் ஈரான் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. ஈரானில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த நாடு பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஈரானின் கச்சா எண்ணெய் வளத்தை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறோம்.
குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்த தீவில் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. எனவே கார்க் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது. தற்போது ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் பிரதிநிதிகள் புத்திசாலிகள். அவர்கள் சூழ்நிலையை நன்று அறிவார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவது குறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் சுமார் 45,000 வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். சுமார் 20 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அமெரிக்க கடற்படையின் ட்ரிபொலி போர்க்கப்பல் கடந்த 28-ம் தேதி மத்திய கிழக்கு பகுதியை வந்தடைந்தது.
இதில் 3,500 வீரர்கள் உள்ளனர். இவர்கள் கடல், வான், தரை வழி போரில் சிறந்தவர்கள். மேலும் பாக்சர் என்ற போர்க்கப்பல் அடுத்த சில நாட்களில் மத்திய கிழக்கு பகுதியை வந்தடையும். இதில் 2,500 வீரர்கள் உள்ளனர். இவர்களும் தரைவழி போரில் திறன் பெற்றவர்கள்.
அமெரிக்காவின் பாராசூட் படையை சேர்ந்த 3,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பாராசூட் மூலம் தரையிறங்கி அதிதீவிர போரில் ஈடுபடும் திறன் படைத்தவர்கள். தற்போதைய படை பலத்தின் மூலம் ஈரானின் கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்ற முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

