இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெள்ளிக்கிழமை (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் “நேரடியாகப் பங்கெடுக்கவில்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘IRIS Dena’ கப்பலைத் தாக்கும் நடவடிக்கை தொடங்கியபோது, அதில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அந்தச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.
“அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை” என்று அவர் ஸ்கை நியூஸ் தளத்திற்குத் தெரிவித்தார்.
தாக்குதலை நடத்திய நீர்மூழ்கியின் பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை என்றாலும், அது ‘USS Minnesota’ என்ற வெர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என இராணுவ இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, சுமார் 50-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவுஸ்திரேலிய அரசின் இந்த நிலைப்பாட்டை பசுமைக் கட்சி செனட்டர் டேவிட் ஷுப்ரிட்ஜ் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இந்தத் போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்று தொழிலாளர் கட்சி கூறிவருவது ஒரு பொய். டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோதப் போரில் அவுஸ்திரேலியா இப்போது உடந்தையாகியுள்ளது,” என அவர் குற்றம் சாட்டினார்.
இராணுவ ஆய்வாளர் மால்கம் டேவிஸ் கருத்துப்படி, நீர்மூழ்கியின் கப்டன் தாக்குதலுக்கான முடிவை எடுத்தவுடன், பயிற்சியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தார்மீக மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காகத் தங்களது அறைகளுக்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க கடற்படை ஒரு போர்க்கப்பலை டார்பிடோ மூலம் அழித்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.




