ஆப்கானிஸ்தானில் நேற்று (22) பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு, சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திதா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தரப்பினர், நேற்றைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தானை எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
தனது நாட்டின் உள்நாட்டு சவால்கள், பாதுகாப்பு தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது. ஆனால், இதுபோன்ற வான்வழித் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டுக் குறைகளை ஒருபோதும் மறைக்க முடியாது.
நாட்டின் நிலப்பரப்பையும் மக்களின் பாதுகாப்பையும் காப்பது எங்களது சட்டபூர்வமான மற்றும் தேசியப் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளது.




