ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு – ஈரானிய இராணுவம் அறிவிப்பு

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 104 கடற்படையினர் உயிரிழந்துள்ளதோடு 32 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த போதே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை அணிவகுப்பினை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் இக்கப்பல் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கியுள்ளது.

இந்தக் கப்பலில் சுமார் 180 பணியாளர்கள் இருந்திருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, உயிர் தப்பிய பலரை சிகிச்சைக்காகக் கரைக்கு அழைத்து வந்தனர்.

அதற்கமைய சுமார் 84 சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு, 32 பேர் காயங்களுடன் மீட்க்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 104 ஈரானிய கடற்படையினல் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.