இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா கிராமத்தைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்ற விவசாயி, தனது நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.5 இலட்சம் பணத்தை வயலில் புதைத்து வைத்த நிலையில், அதனை மறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படிப்பறிவற்ற விவசாயியான மங்கிலால் மேக்வால், கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். கிடைத்த பணத்தை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலின் ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளார்.
எனினும், போதை மற்றும் மறதி காரணமாக பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின்னர் குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை மற்றும் கரையான்களின் தாக்கத்தால் பணத்தாள்கள் கடுமையாக சேதமடைந்து, துண்டு துண்டாக சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.
இதனைக்கண்டு வேதனையடைந்த மங்கிலால் மேக்வால் கண்ணீர் விட்டு கதறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், சேதமடைந்த பணத்தாள்களை வங்கிக்கு எடுத்துச் சென்ற போதிலும், அவை துண்டு துண்டாக சிதைந்திருந்ததால் அவற்றை மாற்றிக் கொடுக்க வங்கி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





