சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளன. எனினும், சவூதி பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயற்பட்டு அந்த இரண்டு ட்ரோன்களையும் இடைமறித்து வான்பரப்பிலேயே சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்களின் சிதறல்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது விழுந்ததன் காரணமாக அங்கு திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு மற்றும் திருத்தப் பணிகளைக் கருத்திற்கொண்டு, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விநியோகத்தில் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவூதியின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இந்தத் தாக்குதல் முயற்சி சர்வதேச ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





