“சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டீர்கள் ; அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் ; பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது!”

“அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டன. அதற்கான விலையை செலுத்தவேண்டும். இறுதி பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது” என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (28) அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் முழுவதும் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள ஈரான் பாராளுமன்ற  சபாநாயகர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை “அழுக்குப் படிந்த குற்றவாளிகள்” என விளித்துள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பேரழிவு தரும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

“இந்தப் போர் ஈரானுக்கான வாழ்வா, சாவா என்பதற்கான போர்  மட்டுமல்ல, இது பழிவாங்கலுக்கான போர். பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது.

நீங்கள் எங்கள் சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டீர்கள். அதற்கான விலையை கொடுத்தேயாக வேண்டும்” என அமெரிக்கா, இஸ்ரேலை நோக்கி கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“நாங்கள் பாரிய பேரழிவைத் தரக்கூடிய பதிலடியை வழங்குவோம். அதனால் நீங்கள் பிச்சை எடுக்கவேண்டியிருக்கும்” என்றும் ஆவேசம் பொங்க ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.