தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவுப் பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை (8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவகமான ‘பிவோல்க்ஸ்’ இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுடைய சுனாமி அலைகள் உருவாகி பல மணி நேரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தோனேசியாவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவகம் நிலநடுக்கத்தின் அளவை 7.7 ரிக்டராக மதிப்பிட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், பின்னர் அவை திருத்தப்பட்டன.
தற்போது வரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், பலத்த அதிர்வால் சிலர் மயக்கமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





