இந்தியாவில் சுமார் நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் இன்று (15) வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 03 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பெற்றோல் லீற்றருக்கு 94.77 ரூபாயிலிருந்து 97.77 ரூபாயாக (3.2% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
டீசல் லீற்றருக்கு 87.67 ரூபாயிலிருந்து 90.67 ரூபாயாக (3.4% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 டொலர் வரை அதிகரித்தது. தற்போது இது 100 முதல் 105 டொலர் வரை நிலவுகிறது. இந்த விலை அதிகரிப்பால் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஒயில், ஹிந்துஸ்தான் பெற்றோலியம் மற்றும் பாரத் பெற்றோலியம் ஆகியவை பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளன.
எரிபொருள் இறக்குமதி அதிகரிப்பதன் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் நுகர்வைக் குறைத்தல் மற்றும் சேமிப்பு, முடிந்தவரை ‘வீட்டிலிருந்து வேலை’ முறையைப் பின்பற்றுதல், தேவையற்ற பயணங்கள் மற்றும் இறக்குமதிகளைத் தவிர்த்தல் ஆகிய சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய மாநிலத் தேர்தல்கள் அண்மையில் நிறைவடைந்த பின்னரே இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் இவ்வளவு காலம் விலையேற்றத்தைத் தள்ளிப்போட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





