ஹோர்முஸ் நீரிணை பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) சனிக்கிழமை (11) ஓமானுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானிய வெளியுறவு அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரக் குழுவினர் ஓமான் அதிகாரிகளைச் சந்தித்துப் பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையின் கடல்சார் பாதுகாப்பு குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கவுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் நடுப்பகுதியில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருந்தது.
எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதுடன், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஈரான் கடந்த வியாழக்கிழமை பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகள் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இவ்வாறானதொரு தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியிலேயே ஈரானிய வெளியுறவு அமைச்சரின் இந்த ஓமான் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




