ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. எனினும், தீவிரவாதக் குழுக்கள் செயல்படும் இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
தாலிபான் தரப்பின் தகவலின்படி, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 9 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை நேரடியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் வைத்தியசாலையின் பெரும்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் செயல்படும் ஆயுதக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்களே பெருமளவில் உயிரிழக்கின்றனர் என ஆப்கானிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.
இந்த தாக்குதல், 2021 ஆம் ஆண்டு காபுல் விமான நிலைய தற்கொலை குண்டுத் தாக்குதல் பின்னர் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அச்சம்பவத்தில் 169 பொதுமக்களும், 13 அமெரிக்க இராணுவத்தினரும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் தொடரும் சூழலில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதலும் தீவிரமடைந்து வருவது சர்வதேச கவலைக்குரியதாக மாறியுள்ளது.
மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான சர்வதேச எதிர்வினைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




