வெனிசுவெலா நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும்படி புனித பாப்பரசர் லியோவிடம் வெனிசுவெலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) கோரிக்கை விடுத்துள்ளார்.
வத்திக்கானில் பாப்பரசரின் உத்தியோகபூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் பாப்பரசர் லியோவை மரியா கொரினா மச்சாடோ சந்தித்தபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனையில் உள்ள பாப்பரசரின் அலுவலக அறையில் அவரது மேசையில் எதிரெதிரே அமர்ந்து உரையாடுவது, இருவரும் கைகுலுக்கிப் பேசுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது பாப்பரசர் மற்றும் வெனிசுவெலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் சந்திப்பை உறுதிப்படுத்துகிறது.
இந்த சந்திப்பின்போது கடத்தப்பட்டு காணாமல்போன அனைத்து வெனிசுவெலா மக்களுக்காகவும் குரல் கொடுக்குமாறு பாப்பரசரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வெனிசுலாவில் 116 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தபோதிலும், அந்த எண்ணிக்கை பதிவில் குறைப்பாடு இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்தன.
தென் அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் விடுத்து வரும் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையிலேயே வெனிசுவெலாவின் எதிர்க்கட்சித் தலைவர், தனது நாட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும்படி பாப்பரசரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் அமைதி நிலவவேண்டும் என்றும் அது ஒரு சுதந்திர நாடாக விளங்கவேண்டும் என்றும் பாப்பரசர் தனது பிரார்த்தனையை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.





