பிரேசில் தலைநகரில்உலங்கு வானூர்தி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என கொலம்பிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

ரியோ டி ஜெனிரோவின் அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப் பகுதியைக் கொண்ட டிஜுகா தேசிய பூங்காவிற்குள் உள்ள ‘விஸ்டா சைனீசா’  என்ற சீனப் கோபுரப் பகுதிக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இப்பகுதி 2011 இல் வெளியான பிரபல ‘Rio’ அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

செங்குத்தான மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் உடனடியாகத் தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த விமானி மற்றும் மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் ரியோவிற்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.

ஹெலிகொப்டரில் ஒரே நேரத்தில் 3 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் குடும்பத்தினர் இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

முதல் பயணத்தில் சென்ற சிறுமியின் பாட்டி, அத்தை மற்றும் அத்தை மகள் ஆகிய மூவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சிறுமி, அவரது தந்தை மற்றும் தந்தையின் துணைவியார் ஆகியோர் அடுத்த பயணத்திற்காகக் காத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

சடலங்கள் முற்றிலும் தீயில் கருகிய நிலைமையில் இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் பிரேசில் அதிகாரிகளுக்குக் கொலம்பிய தூதரகம் உதவி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரியோ டி ஜெனிரோ மேயர் எட்வார்டோ கவாலியேரே,

சுற்றுலா ஹெலிகொப்டர் சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு பிரேசிலின் தேசிய சிவில் விமான போக்குவரத்து முகமைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோ பகுதியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் அமெரிக்கப் பாடகர் ஆலிவர் ட்ரீ உட்பட 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய விபத்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.