வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது நாட்டின் புதிய டெஸ்ட்ராயர் போர்க்கப்பலை இரு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, அந்தக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனைகளையும் பார்வையிட்டதாக வடகொரிய அரசின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, வடகொரிய கடற்படையின் அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகளை வேகப்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி, கிம் ஜொங் உன் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மேற்குக் கடற்கரை நகரமான நம்போ கப்பல் கட்டும் தளத்திற்கு விஜயம் செய்து, 5,000 தொன் கொள்ளளவு கொண்ட “சோ ஹ்யோன்” (Choe Hyon) என்ற புதிய டெஸ்ட்ராயர் கப்பலை ஆய்வு செய்துள்ளார். இந்த போர்க்கப்பல் முதன்முதலில் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.

மேலும், அதே வகையைச் சேர்ந்த மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிம் ஜொங் உன், “சோ ஹ்யோன்” கப்பலின் உருவாக்கம் தனது இராணுவத்தின் செயல்பாட்டு பரப்பையும் முன்கூட்டிய தாக்குதல் திறனையும் (Pre-emptive Strike Capability) அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தென்கொரிய இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் இந்த கப்பல் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், இந்த கப்பல் முழுமையாக செயலில் ஈடுபடத் தயாராக உள்ளதா என்பது குறித்து சில நிபுணர்கள் சந்தேகங்களை முன்வைத்துள்ளனர்.
புதன்கிழமை நடைபெற்ற சோதனையில், “சோ ஹ்யோன்” போர்க்கப்பலில் இருந்து பல க்ரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கிம் ஜொங் உன் நேரில் பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் “தந்திரோபாய” (Strategic) ஆயுதங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக இந்த சொல் அணு ஆயுதங்களை தாங்கக்கூடிய ஏவுகணைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

போர்க்கப்பலின் கடல் சோதனைகளை பார்வையிட்ட கிம் ஜொங் உன், இந்த கப்பல் அனைத்து செயல்பாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு புதிய போர்க்கப்பல்களை இதே அல்லது அதற்கு மேம்பட்ட வகையில் கட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா பெரும்பாலும் பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது கிம் ஜொங் உன் கடற்படை திறனை வலுப்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம்போ கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல், வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவல் தினமான அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடற்படை அணு ஆயுத விரிவாக்க முயற்சிகள் “நமது கடல் அதிகாரத்தை பாதுகாப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என கிம் ஜொங் உன் கூறியுள்ளார்.
சில அரசியல் ஆய்வாளர்கள், வடகொரியா விரைவில் புதிய கடல் எல்லையை அறிவிக்கத் தயாராக இருக்கலாம் என்றும் அது தென்கொரிய கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கொரிய போரின் பின்னர் அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் வரையப்பட்ட Northern Limit Line கடல் எல்லையை வடகொரியா ஏற்க மறுத்து வருகிறது. இந்த கடல் எல்லைப் பகுதி கடந்த ஆண்டுகளில் பல கடற்படை மோதல்களுக்கு காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத களஞ்சியத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களை கிம் ஜொங் உன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனவும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது.







