மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஈரானே தீர்மானிக்கும் என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ட்ரம்பின் இந்தக் கருத்தை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவத் தாக்குதல்களை எப்போது நிறுத்த வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிராந்தியத்தின் எதிர்காலம் தற்போது ஈரானிய இராணுவத்தின் கைகளிலேயே இருப்பதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரான் தனது புதிய கடும்போக்குவாத உச்சநிலைத் தலைவரின் வழிகாட்டலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்ய முற்பட்டால், போர் இன்னும் தீவிரமடையும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த நேரடி மோதல் போக்கு, சர்வதேச மட்டத்தில் பாரிய பதற்றத்தையும் மனிதாபிமான நெருக்கடிகளையும் தோற்றுவிக்கலாம் என அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



