லெபனான் – இஸ்ரேல் தலைவர்கள் மூன்று வாரங்களில் சந்திக்கலாம் – ட்ரம்ப் தெரிவிப்பு

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவர்கள் அடுத்த மூன்று வாரங்களுக்குள் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதிக் காலத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் நேருக்கு நேர் சந்திக்க வைப்பதன் மூலம் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன்  ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லாவுற்கு வழங்கும் நிதி உதவிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் ஊடகவியலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். “ஈரான் ஹெஸ்புல்லாவிற்கு நிதி வழங்குவதை நிறுத்துவது ஒரு கட்டாய நிபந்தனை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை “மிகவும் சிறப்பாக” அமைந்ததாக ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

“அடுத்த சில வாரங்களுக்குள் லெபனான் ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் இங்கே (வெள்ளை மாளிகை) வருவார்கள் என நான் நினைக்கிறேன். நிரந்தர அமைதியை எட்டுவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு இது.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.