விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலை: சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆனி ராஜா சாடல்

‘‘நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் ஆனி ராஜா, தேசிய அரசியல் விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் அ.மு.சலீம் மாநில அரசியல் – தேர்தல் பணி குறித்து உரையாற்றினார். தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா வேலை அறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் பற்றாளர் இருப்பதால் அதை மாற்றி அமைக்க வேண்டும், ப்ரிபெய்டு மீட்டர் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ஏஎப்டி, பாரதி, சுதேசி மில்களை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அகில இந்திய செயலர் ஆனி ராஜா, ”வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து, அதை நோக்கி நகர்கிறோம். இந்த ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுவதற்கும் முக்கியமான தேர்தல் இது. இந்தியாவில் பாசிச ஆட்சி இருக்கிறது.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தின் படி ஆட்சி நடைபெறவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும் கொள்கைகளை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை அடமானம் வைத்து விட்டார்கள். எரி பொருள் தட்டுப்பாடு பற்றி எந்த கவலையும் இல்லாமல் அமெரிக்காவின் முடிவுகளுக்கு பாஜக அரசு செவி சாய்த்து வருகிறது.

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அந்தந்த சட்டமன்றங்களுக்கான தேர்தல் மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளை கேட்டுள்ளது.

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது? எங்கிருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்? எவ்வளவு வருகிறது? என மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பல இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்’’ என்று தெரிவித்தார்.