ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா நீக்கியது.

தற்போது நட்பு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.18.8 கோடி வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் அலாதீன் போரோஜெர்தி கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது. போர் காரணமாக ஈரானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

ஈரான் தூதரகம் மறுப்பு:

இகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வெளியானது ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல” என கூறப்பட்டுள்ளது.

‘வளைகுடா முழுவதும் கண்ணிவெடி வைப்போம்’

ஈரான் பாதுகாப்பு கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் கடலோரப் பகுதிகள் அல்லது தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் வளைகுடாவுக்கு வரும் அனைத்து வழிகளிலும், மிதக்கும் கண்ணிவெடிகள் உட்பட பல்வேறு வகையான கடல் கண்ணிவெடிகள் வைக்கப்படும்.

அவ்வாறு வைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ளது போன்ற நிலை வளைகுடா முழுவதும் நீண்ட காலத்துக்கு ஏற்படும். 1980-களில் சில கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதில் 100-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தோல்வி அடைந்ததை மறந்துவிடக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்