ஹார்முஸ் நீரிணை மூடல்..எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை: இமானுவல் மேக்ரான்

ரஷ்யா மீதான நமது நிலைப்பாட்டை நாம் மாற்றக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட சில எண்ணெய் தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு, தங்களது எண்ணெய் இல்லாமல் உலக எரிசக்தி சந்தை நிலையாக இருக்க முடியாது என்று ரஷ்யா கூறியது.

ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இதுகுறித்து ஜி7 தலைவர்களுடனான வீடியோ அழைப்பிற்கு பிறகு பேசியுள்ளார்.

அவர், “ஹார்முஸ் நீரிணையின் மூடல் ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை. ரஷ்யா மீதான நமது நிலைப்பாட்டை நாம் மாற்றக்கூடாது. உக்ரைன் மீதான நமது முயற்சிகளைத் தொடர வேண்டும் என்பதே ஒருமித்த கருத்து” என்றார்.

இமானுவல் மேக்ரான் ஏழு முன்னேறிய பொருளாதாரங்களின் குழுவின் சுழற்சித் தலைமையை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.