ஹோர்மூஸ் நீரிணை அல்ல; ஈரானிய துறைமுகங்கள் முற்றுகை – அமெரிக்கா விளக்கம்

ஈரான் தொடர்பான பதற்ற நிலைமையில், ஹோர்மூஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல் சுமார் 40 நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றம் ஓரளவு தணிந்தது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இஸ்லாமபாத் நகரில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சுமார் 21 மணிநேரம் நீடித்த போதிலும், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்த சூழ்நிலையில், மீண்டும் தாக்குதல் ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை அமெரிக்க கடற்படை கப்பல்கள் சூழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.

ஆனால், இந்த தகவல்களுக்கு விளக்கம் அளித்த அமெரிக்க விமானப்படை ஜெனரல் மேன் கெயின், “ ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடவில்லை. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளையே முற்றுகையிட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை ஈரான் பிராந்திய கடற்பரப்பிலும் சர்வதேச நீர்வழிகளிலும் தொடரும் என்றும், ஈரானின் துறைமுகங்களுக்கு வருகை தரும் அல்லது அங்கிருந்து புறப்படும் அனைத்து கப்பல்களுக்கும், நாடு வேறுபாடின்றி இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.