ஹோர்மூஸ் முற்றுகை : நிலப்பரப்பு வழியாக ஈரான் எரிசக்தி ஏற்றுமதி சாத்தியமா ?

அமெரிக்காவின் கடல்சார் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை நிலப்பரப்பு வழியாக முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு தரவுகளின்படி, ஈரான் நாளொன்றுக்கு சுமார் 1.68 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை கடல் வழியாக ஏற்றுமதி செய்து தனது பொருளாதாரத்தை தக்கவைத்திருந்தது.

ஈரானைச் சுற்றி எரிசக்தி தேவையுள்ள பல நாடுகள் இருந்தாலும், கடல் வழி ஏற்றுமதிக்குச் சமமான அளவை நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்வது மிகக் கடினம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஈராக், துருக்கி மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளுக்குக் குழாய்கள் மூலம் எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்க ஈரான் முயற்சிக்கலாம். என்பதுடன் கஸ்பியன் கடல் மார்க்கமாக  ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள “நெகா” (Neka) எண்ணெய் முனையத்தை பயன்படுத்தி மாற்று ஏற்றுமதி முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அத்துடன் பாகிஸ்தான் உடனான நீண்ட நில எல்லை வழியாக எரிபொருள் கடத்தப்படலாம். அதேபோல், ஈராக் எண்ணெயுடன் ஈரானின் எண்ணெயை கலந்து தடைகளை தவிர்க்கும் முயற்சிகளும் இடம்பெறலாம் என சில மாற்று வழிகளை சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இவ்வாறு முன்வைக்கப்படும் மாற்று வழிகள் ஈரானின் பொருளாதார தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. சர்வதேச எரிசக்தி முகவரமைப்பின் (International Energy Agency (IEA) ) கருத்துப்படி, இவ்வாறான மாற்று ஏற்றுமதி வழிகளுக்கான திறன் மிகவும் குறைவாக உள்ளது என்றும் நீண்டகால பொருளாதார தடைகளால் ஈரானின் குழாய்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற பழைய உள்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளன என்றும் துருக்கிக்கு எரிவாயு ஏற்றுமதி ஏற்கனவே ஒப்பந்த அளவை விட குறைந்துள்ளது என்றும் ஆர்மேனியா உடனான வர்த்தகம், ஈரானின் மொத்த பொருளாதாரத்தில் மிகச் சிறிய பங்கையே வகிக்கிறது என்றும் கூறுகிறது.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதும், கடல் வழி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதும், ஈரானின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த முற்றுகை நீடித்தால், ஈரானிய பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க நிதித்துறையின் முன்னாள் அதிகாரி மெய்ட் மலகி (Miad Maleki ) எச்சரித்துள்ளார்.

மொத்தத்தில், நிலப்பரப்பு வழி மாற்று முயற்சிகள் இருந்தாலும், கடல் வழி ஏற்றுமதிக்கு இணையான நிலையை அடைவது ஈரானுக்கு மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்