தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 02.11.2025ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. அன்றையநாள் 02.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் நினைவுநாள் என்பதால் அவர்களுக்கான வணக்கமும் செலுத்தப்பட்டது.
சுவிஸ் நாடுதழுவிய வகையில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. காலை 10.45 மணிக்குப் பொதுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து 12.15 மணிவரை கவிதை எழுதுதல் போட்டி நடைபெற்றது. தாய்மொழி, தமிழீழம், தமிழீழத் தேசியத்தலைவர், தமிழீழத் தேசியச்சின்னங்கள், மாவீரர் போன்ற விடயப்பரப்புகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் 4 தலைப்புகள் கொடுக்கப்படும். அவற்றுள் ஒரு தலைப்பினைத் தெரிவுசெய்து, பிரிவுகளுக்குரிய வரிகளின் எண்ணிக்கையில் கவிதை எழுதுதல் வேண்டும்.
பிற்பகல் 13.00 மணிமுதல் போட்டியாளர்கள் தாம் எழுதிய கவிதையைப் பாடும் போட்டி நடைபெற்றது. கவிதை எழுதுதல், கவிதை பாடுதல் இரண்டுக்கும் நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பெற்று, வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு போட்டியின் நிறைவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசிலும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. எழுச்சிக்கவி 2025 விருதினை திருமதி சுதர்சினி யாதவன் அவர்கள் தனதாக்கிக் கொண்டார். வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு 27.11.2025 அன்று பாசல் நகரில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழங்கப்படும்.
கவிதைப்போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்களை உற்சாகப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகள். போட்டியைச் சிறப்பாக நடாத்துவதற்கு உறுதுணையாகவிருந்த நடுவர்கள், எழுச்சிக்கவிகள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டி எதிர்வரும் 15.11.2025 சனிக்கிழமை வலயமட்டமாகவும் 16.11.2025 நாடுதழுவிய வகையிலும் நடைபெறவுள்ளது. இப்பேச்சுப்போட்டிகளுக்கும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம்.
எமது இளந்தலைமுறையினரும் வளர்ந்தோரும் தாயகப் பற்றோடு மாவீரர் தியாகங்களை அறிந்தவர்களாக வாழ்வதற்கும் தமது தனித்தன்மையான ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்குமாக நடாத்தப்படும் கவிதை, பேச்சுப் போட்டிகளில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.





