கலை என்பது மக்களுக்கானது; மக்களின் வாழ்வியலும், உணர்வுகளும், இன்ப துன்பங்களும், அவர்களின் கனவுகளும் போராட்டங்களும் அதில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து காட்டியவர் பாரதிராஜா. உயரடுக்குகளின் உலகத்தைத் தாண்டி, கிராமங்களின் மண் வாசனையையும், சாதாரண மக்களின் வாழ்வையும் தனது கூரிய பார்வையால் உள்வாங்கி, அவற்றை புதிய வார்ப்புகளாக வடிவமைத்து திரையில் உயிர்ப்பித்தார். அதனால்தான் அவரது படைப்புகள் வெறும் திரைப் படங்களாக அல்லாமல், மக்களின் வாழ்க்கை அனுபவங்களாக மாறின.
சமூக நீதி, மனிதநேயம், சமத்துவம் உள்ளிட்ட பல புரட்சிகர சிந்தனைகளை தனது படைப்புகளின் ஊடாக தமிழ் மக்களிடையே விதைத்தவர் அவர். மகாகவி பாரதி தனது கவிதைகளால் புதுமையையும் முன்னோக்கிய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சென்றதைப் போல, இயக்குநர் பாரதிராஜா தனது திரைப் படங்களின் வழியே அவற்றை ஜனரஞ்சகமாகவும் ஆழமாகவும் மக்களின் மனங்களில் பதித்தார். கலைக்குள் கருத்தியலையும், கருத்தியலுக்குள் மனித உணர்வுகளையும் இணைத்து மக்களிடம் கொண்டு சென்ற அபூர்வ ஆளுமை அவர்.
2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இன அழிப்பின் உச்ச கட்டத்தில், தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த மனிதாபிமான உணர்வுடன் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலரும் அறிந்தவை. ஈழத் தமிழ் மக்கள் மீது அவர் கொண்டிருந்த நேசமும் பற்றும் வெறும் அரசியல் நிலைப்பாடாக அல்ல; அது அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த உணர்வாகும். அவருடன் நெருக்கமாக பழகி உரையாடிய தருணங்களில் அந்த உணர்வின் ஆழத்தை நாம் உணர்ந்த போது, கலைஞராக மட்டுமல்லாமல் மனிதராகவும் அவர் மீது எமக்கு அளவற்ற மதிப்பும் ஈர்ப்பும் ஏற்பட்டது.
இங்கிலாந்தில் நாம் அவரை அழைத்துச் சென்ற பல இடங்களில், தமிழ் மக்களின் துயரங்களையும் எதிர்காலம் பற்றியும் அவர் திறந்த மனதுடன் உரையாடினார். தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்ற உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுபவர்களையும் பார்த்த போது அவர் உணர்ச்சி வசப்பட்ட தருணங்களும் மறக்க முடியாதவை.
இன்று அவர் உடலால் எம்மிடமிருந்து பிரிந்திருக்கலாம். ஆனால் அவர் விதைத்த சிந்தனைகளும், உருவாக்கிய கலை மரபும், ஊக்கமளித்த தலைமுறைகளும் தொடர்ந்து வாழ்கின்றன. தமிழ் திரைப்பட உலகில் அவர் உருவாக்கிய புதிய மொழியும், அவர் தாக்கம் செலுத்திய எண்ணற்ற படைப்பாளிகளும், அவர் விட்டுச் சென்ற கலைச் செல்வங்களும் பாரதிராஜா என்ற கலைஞன் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து பேசும்; அவரது நினைவு தலைமுறைகளைத் தாண்டி வாழும்.
பிரித்தானிய தமிழர் பேரவை






