பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி – 2025

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 30 ஆவது தடவையாக நடாத்திய தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2025 நான்கு நாட்கள் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

இப்போட்டியில் இறுதிநாள் போட்டி கடந்த 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 4 நாட்கள் நடைபெற்ற வீரர்களுக்கான தெரிவுப் போட்டியின் இறுதிப் போட்டி சார்சல் மாநகரத்தில் நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானத்தில் காலை 9:30 க்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

காலை 9.00 மணிக்கு மைதானத்தின் வாசலில் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ள தாயகவிடுதலைப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்களப்பலியான லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாக மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் சுடர் ஏற்றி வைக்க முழவு வாத்திய இசையுடன் விருந்தினர், நடுவர்கள் மைதனத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

மைதானத்தை வந்தடைந்த பின்னர் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அனைத்து விளையாட்டுக் கழகத்திற்கும், வீரர்களுக்கும், மக்களுக்கும் இதயம் நிறைந்த வணக்கமும், வாழ்த்துதல்களும் தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

முதல்நிகழ்வாக எம் தேசத்திற்காக உயிர் ஈந்த அனைத்து உன்னத உயிர்களுக்குமான பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறையின் துடுப்பெடுத்தாட்டப் பொறுப்பாளர் திரு. ஆறுமுகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

அனைவருக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற உன்னத கோட்பாடுகளைக் கொண்ட பிரான்சு தேசத்தின் கொடியேற்றி வைக்கப்பட்டது. தேசியக்கொடியை மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் திரு. ராஜலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க

ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள் ஆக்கிய கொடியிது பிரபாகரன் என்றிடும் காவிய நாயகன் போற்றிடும் கொடியிது தமிழ்த் தேசத்தின் கொடியிது எங்கள் தேசியக்கொடியிது என்ற எம் உயிரான தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் விளையாட்டுத்துறையின் பொறுப்பாளர் திரு. கிருபா அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

1997.01.09 இல் பரந்தன் ஆனையிறவுச்சமரில் சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட கப்டன் சுபானந்தி அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி வைத்திருந்தார். தொடர்ந்து மலர் வணக்கம் செய்யப்பட்டதுடன் அகவணக்கம் இடம் பெற்றது.

தொடர்ந்து கழகங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.

தமிழர் விளையாட்டுக் கழகம் – 93

தமிழர் விளையாட்டுக்கழகம் – 95

தமிழர் விளையாட்டுக் கழகம்- 94

நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம்.

ஈழவர் விளையாட்டுக்கழகம்.

அரியாலை விளையாட்டுக்கழகம்.

யாழ்டன் விளையாட்டுக்கழகம்.

F.C Neuf Trois விளையாட்டுக்கழகம். போன்ற முன்னணிக்கழகங்களின் கொடிகளை அதன் பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர். இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு 9 கழகங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து ஒலிம்பிக்தீபம் ஏற்றி வைக்கப்படுகின்றது.

தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர். மதிப்புக்குரிய திரு. இராஜலிங்கம் அவர்கள் தொடக்கி வைக்க கடந்த ஆண்டு சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் எடுத்துச் செல்ல ஏனைய கழங்களும் இதில் இணைந்து கொண்டனர்.

கழகங்களுக்கான உறுதிப்பிரமாணம் கழக வீரர்களும், நடுவர்களுக்கான உறுதிப்பிரமாணமும் நடுவர்களால் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்துக்கழகங்களின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது. ஆரம்பத்தில் முழவுவாத்திய இசை முழங்க அதன் பின்னர் ஒவ்வொரு கழகங்களின் வீரவீராங்கனைகள் தமது கழகக் கொடிகளை தாங்கி அழகாக அணிவகுத்து வந்திருந்தனர். ( காலமாற்றத்தினால் எதிர்பாராத விதமாக காலை முதல் சிறுதுளியாக இருந்த துவான மழை பெருமழையாக பெய்யத் தொடங்கியிருந்தது. இதற்கு மத்தியில் அணிவகுப்பு இடம் பெற்றது. கொட்டும் மழையிலும் வீரர்கள் அனைவரும் அணிவகுப்பை திறம்படச் செய்திருந்தனர். அதற்கு ஏற்றவகையில் முழவு வாத்திய இசை பலம் சேர்த்திருந்தது.

அணிவகுப்பு மரியாதையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு. பார்த்திபன், மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பொறுப்பாளர் திரு. புவி, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன், மெய்வல்லுநர் போட்டிகளின் துணைப் பொறுப்பாளர் திரு. பீலிக்ஸ், மாவீரர் கப்டன் சுபானந்தினியின் சகோதரி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

இன்றைய இறுதிப்போட்டிகள் பற்றி மெய்வல்லுநர் போட்டிகளின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கடந்த வாரங்களில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் தெரிவு செய்யப் பட்ட ஆண், பெண் வீரர்களுக்குமான போட்டிகள் இடம் பெற்றிருந்தன. 1500 மீற்றர் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானது இடம் பெற்றது. போட்டிகள் ஆரம்பிக்கின்ற நேரம் “ இயற்கை எனது நண்பன் வரலாறு எமது வழிகாட்டி, வாழ்க்கை எமது தத்துவாசிரியன் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள் வாழிகாட்டும் விதமாக மழை படிப்படியாக நின்று சூரிய வெளிச்சம் தோன்றியது.

வீரர்கள் உற்சாகமடைந்து போட்டிகள் விறுவிறுப்பாக பகுதி பகுதியாக இடம் பெற்றன. 75 முதல் 400 மீற்றர் ஆண்கள், பெண்கள் அனைத்துப்பிரிவுக்கான ஓட்டப்போட்டிகள், பந்தெறிதல், ஆண்கள், பெண்களுக்கான அனைத்துப்பிரிவுக்கான அஞ்சல் ஓட்டம் இறுதி நடைபெற்றிருந்தது.

நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உப கட்டமைப்பு பொறுப்பாளர்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் மாவீரர் உறவுகளாலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி அ, ஆ பிரிவுகளில் 32 வரையான கழகங்களுடன் ஆண்டின் தொடக்கத்திலிருந்து விளையாடி இறுதி போட்டிக்கு தெரிவான ஈழவர் விளையாட்டுக்கழகம், எதிர் சென் பற்றிக்ஸ் வி.க இடையிலான போட்டி இடம் பெற்றிருந்தது. இதில் பங்கு பற்றும் இரண்டு கழக வீரர்களும் தமிழீழத் தேசியக்கொடியை தாங்கியும் அதன் பின்னால் கழகக்கொடிகளுடன் மைதனத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர், விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர், மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர், கழகப்பொறுப்பாளர் போன்றோர் வீரர்களுக்கு கை கொடுத்து மதிப்பளித்தனர். இரண்டு கழகங்களும் வீரர்களும், கடந்த காலங்களில் உதைபந்தாட்ட போட்டிகளிலும் பல வெற்றிகளை குவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதைபந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று மாவீரர் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. அதேநேரத்தில் எமது இளையவர்களும் அவர்களை வழிநடத்துகின்றவர்களும், பொறுப்பானவர்களும், விளையாட்டுத்துறையினரும், சில விடயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது. வெற்றிக் கொண்டாட்டம் என்பது எமது இனத்துக்கு மிகவும் முக்கியமானதே அதேநேரத்தில் மைதானத்தில் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு இடையூறாகவும், குழந்தைகள், பிள்ளைகள் பயப்படும் விதமாகவும், முகம்சுளிக்கும் வகையிலும் கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்களையும், சத்த வெடிகளைப் போடுவதையும், உயிர் ஈந்த மாவீரர்களின், மக்களின் ஈகத்தில் நின்று கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது விளையாட்டுத்தானே என்கின்றவர்களும் உள்ளபோதும் எதிர்காலம் அடுத்த தலைமுறை எப்படி இதனைக் கொண்டு போகப்போகின்றது என்பதனை சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்களால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இளந்தலைமுறைக்கு அதனை எடுத்துச் சொல்ல வேண்டும்

இதே வேளை நாடற்றவர்களின் தேசங்களிடையே சர்வதேச ரீதியாக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் தமிழீழ தேசத்தின் சார்பில் அதன் அணியில் பிரான்சு நாட்டின் வீரர்களாக பங்குபற்றி தமிழீழ தேசத்திற்கு விளையாட்டுதிறனால் பலம் சேர்த்த வீரர்கள், வீராங்கனை அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திரு. திபு மற்றும் சுரேஸ் போன்றவர்கள் மதிப்பளிக்கப் பட்டனர்.

தொடர்ந்து வெற்றியீட்டிய கழகங்கள், வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்படுவதற்கு முன்னர்

மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளில் பங்கெடுத்த கழகங்களுக்கும், வீரர்களுக்கும், மக்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக நன்றியையும் தெரிவித்ததோடு, அதே நேரத்தில் எந்த மாவீரர்களை நினைவில் சுமந்து அவர்களை நெஞ்சிலே நிறுத்தி அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கின்ற அதே நேரம் அவர்களின் கனவுகள் நனவாக்கவும் இன்று அரசியல் சனநாய பாதையில் பயணிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதையும், தாயகத்தில் செம்மணியில் கண்டெடுக்கப்படும் எமது மக்களின் புதைகுழிக்கு நீதி வேண்டியும், சிறையில் இன்னும் அநியாயமாக வாட்டி வதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளையும் விடுவிக்க பிரான்சு தேசமும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசமும் கவனம் எடுக்க வேண்டும் எனக்கோரி கறுப்புயூலை 23 ஆம் ஆண்டின் 42 ஆவது ஆண்டின் கவனயீர்ப்பு நிகழ்வு 23.07.2025 (புதன்கிழமை) பி.பகல் 3.00 மணிக்கு பிரான்சு பாராளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெறவுள்ளதை பரப்புரை மக்கள் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அதனை இளையவர்களுக்கு அவர்கள் பங்கு பற்றும் வகையில் பிரெஞ்சு மொழியில் அரசியல் துறையின் செயற்பாட்டாளர் பேச்சாளர், செல்வன் நிதுபன் தெரிவித்திருந்தார்.

மாவீரர் நினைவு சுமந்து 2025 போட்டியில்

முதலாம் இடத்தை : யாழ்டன் விளையாட்டுக்கழகமும். ( 551.5) புள்ளி

இரண்டாம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 94. ( 497.5) புள்ளி

முன்றாம் இடத்தை : நல்லூர் ஸ்தான் வி. கழகம் ( 470) புள்ளி

நான்காம் இடத்தை : வட்டுக்கோட்டை வி. கழகம் ( 433) புள்ளி

ஐந்தாம் இடத்தை : ஈழவர் வி.கழகம் ( 423 )புள்ளி

த.வி. கழகம் 93. ( 421) புள்ளி

F.C Neuf Trois கழகம் ( 339) புள்ளி

அரியாலை ஐ. விளையாட்டுக்கழகம் ( 76 ) புள்ளி

தமிழர் விளையாட்டுக்கழகம் 95. ( 47 ) புள்ளிககைளையும் பெற்றிருந்தனர்

இறுதியாக அனைத்து விளையாட்டுக் கழகக்கொடிகளும் இறக்கி வைக்கப்பட்டு தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் போட்டி நிகழ்வு நிறைவு பெற்றது.

சமீபத்திய செய்திகள்