விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் சுடர் ஏற்றி கார்த்திகை மலர் கொண்டு வணக்கம் செலுத்துகின்றோம்.
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடாத்தப்படவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நாள் இங்கு வாழும் தேசபக்தர்களின் தேசஅபிமானிகள், எமது மக்களின் பொருளாதார பங்களிப்புடன் எழுச்சிபூர்வமாகச் செய்து வருகின்றோம்.
அந்த பொருளாதாரப்பங்களிப்பை பெற்றுக்கொள்ளுமுகமாக பங்களிப்பு அட்டைகள் தயார்செய்து ஆண்டுதோறும் அந்தப்பங்களிப்பைப் பெற்று வருகின்றோம். இதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரப் பங்களிப்பு அட்டை நேற்று 23.08.2025 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் வைத்து அனைத்துக் கட்டமைப்பின் பொறுப்பாளருக்கும், மற்றும் தேசப்பணியாளர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
மாலை 16..00 மணிக்கு மாவீரர் திருவுருவப் பொதுப்படத்திற்கு ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றி வைக்கப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, இந்த ஆண்டு பங்களிப்பு அட்டையின் நடைமுறை விடையங்கள் அதனைக்கடைபிடிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி தெரியப்படுத்தப்பட்டது.
கிளைப்பொறுப்பாளர் மற்றும் மாவீரர் பணிமனை துணைப்பொறுப்பாளர், நிதிப்பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர்களால் ஏனைய கட்டமைப்புப் பொறுப்பாளர்களுக்கும். துணைப்பொறுப்பாளர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
தமிழீழ தேசத்தின் வரலாற்றை எமது அடுத்த தலைமுறையினருக்கு எப்படி இந்தத் தலைமுறையினர் எடுத்துச்சென்றார்களோ அதேபோன்று தமிழீழ விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் ஈகத்தையும், தற்கொடையையும் எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்ல வேண்டும். ஏனெனில் தமிழீழ தேச வரலாறு என்பது எங்கள் உயிரிலும் மேலான மாவீரர்களின் உயிர்த்தியாகத்தினாலேயே எழுதப்படுகின்றது.
இங்கு வாழும் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர் உற்றார் உறவினர் நண்பர்கள் எம் தேசமக்கள் எல்லோரும் ஒன்றுகூடி அந்த உன்னதர்களின் உன்னதமான நாளில் ஊர்கூடி உலகம் வாழ் தமிழீழ மக்களோடு உணர்வில் ஒன்றாகி மாவீரர் திருவுருவப்படத்திற்கு ஒளியேற்றி கண்ணீர் சிந்தி மலர் கொண்டு வணக்கம் செலுத்தி நாம் இழந்த தேசத்தை மீண்டும் அடைவோம் என்று மனதில் உறுதியேற்றிக்கொள்வோம். அந்த நிகழ்வுக்கான உன்ன பணியைச் செய்திடுவோம்.