ஜனாதிபதி தேர்தலில் எதிய்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சி எடுத்த தீர்மானம் அவரது பிரசாரத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தைக் கொடுக்கும். அவரது பிரசாரம் ஏற்கெனவே தொடர்ச்சியாக பலம் பெற்றுவருவதுடன் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களைக் கவர்ந்திழுக்கிறது. கருத்துக்கணிப்புகளும் அவரது மக்கள் ஆதரவில் முன்னேற்றத்தையே காட்டுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்த தமிழரசு கட்சி தமிழ் மக்களின் வாக்குகளை திரட்டுவதில் அதன் ஆற்றலைப் பொறுத்தவரை கணிசமான அரசியல் கனதியைக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் இடையறாது ஊடாட்டங்களை செய்துவரும் தமிழரசு கட்சிக்கு அந்த சமூகத்தின் மத்தியில் நம்பகத்தன்மை இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததன் மூலம் அந்த கட்சி ஏற்கெனவே அவருக்கு ஆதரவை தெரிவித்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுடனும் மலையக தமிழ் கட்சிகளுடனும் இணைந்து கொண்டுள்ளது.
கட்சியின் உயர்மட்டம் வழங்கும் ஆதரவு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதற்காக உத்தரவாதம் அல்ல.ஏற்கெனவே எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவைத் தெரிவித்த முஸ்லிம் கட்சிகளினதும் மலையக தமிழ் கட்சிகளினதும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவங்களுக்கு கீழ்ப்படிய மறுத்து இன, மத சிறுபான்மைச் சமூகங்களுக்கு உறுதியான நேசக்கரத்தை நீட்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கிறார்கள்.
தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையிலும் கூட, அதன் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கட்சியின் தீர்மானத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. சுகவீனம் காரணமாக கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சேனாதிராஜா கூறுகிறார். சிறீதரன் ஏற்கெனவே தமிழ் பொதுவேட்பாளர் பி. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதற்கு தனிப்பட்ட முறையில் தீர்மானத்தை எடுத்தார்.
எதிச்க்கட்சி தலைவருக்கு கிடைத்திருக்கும் இன, மத சிறுபான்மைச் சமூக கட்சிகளின் ஆதரவும் கூட அவரது தேர்தல் வெற்றிக்கான உத்தரவாதம் அல்ல. 2019 ஜனாதிபதி தேர்தலிலும் இதே கட்சிகளின் ஆதரவு எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைத்த போதிலும் கூட கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் தோல்வி கண்டார். தேசியவாத பிரசாரங்களை முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களின் பேராதரவு கிடைத்தது.
இந்த தடவை மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசாரங்களின்போது இனத்துவ தேசியவாதத்தில் நாட்டம் காட்டவில்லை. தேர்தல்களின்போது இனத்துவ தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு மற்றைய சமூகங்களை எதிரிகளாகக் காட்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது வழமையாக இருந்துவந்த கடந்த காலத்தில் இருந்து இது வேறுபட்டதாக இருப்பது வரவேற்கத்தக்கது.
மிதவாத விஞ்ஞாபனங்கள்
மூன்று பிரதான வேட்பாளர்களும் குறுகிய இனத்துவ தேசியவாதப் பிரச்சினைகளினால் திசைதிருப்பப்படாமல் இனப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை கடைப்பிடித்திருக்கிறார்கள். ” புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்படமாட்டாது. பதிலாக்மாகாண மட்டத்தில் அபிவிருத்தி பலப்படுத்தப்படும் ” என்று எதிர்க்கட்சி தலைவரின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகிறது.
இது மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதாக முன்னர் வழங்கிய வாக்குறுதியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை என்பதை காட்டுகிறது. தான் நடைமுறைப்படுத்தப் போகின்ற விடயங்களைப் பொறுத்தவரை பிரேமதாச தனது போட்டியாளர்களை விடவும் திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்துவருகிறார்.
அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். மாகாணங்களிடமிருந்து மத்திய அரசாங்கம் எடுத்துக்கொண்ட அதிகாரங்கள் திருப்பி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தீர்மானிப்பது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பு என்று கூறி அது விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின்போது 2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவு செய்யப்போவதாகவும் ஆட்சிமுறையில் சகல மக்களும் பங்கேற்கக் கூடியதாக ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்துக்கும் மாவட்டத்துக்கும் மாகாணத்துக்கும் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப் போவதாகவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்எ கூறியிருக்கிறார்.
இந்த தேர்தலில் மையப்பிரச்சினை பொருளாதார நெருக்கடியும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் வழியில் நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுமேயாகும். 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இன, மத அல்லது பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் சனத்தொகையின் சகல பிரிவினரையும் தொடர்ந்து பாதித்துக் கொண்டேயிருக்கிறது.
பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையின் வறுமை மட்டம் 13 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 70 சதவீதத்தை எட்டிய பணவீக்கம் வாழ்க்கைத் தரங்களை படிப்படியா அரித்துவிட்டது.
இந்த பின்னணியில், ஊழல் மற்றும் வளஙகள் தவறான முறையில் ஒதுக்கப்ட்டது தொடர்பான பிரச்சினைகள் தற்போதைய அரசியல் விவாதத்தின் மையப்பொருளாக விளங்குகின்றன. அவை கடுமையான அச்சவுணர்வையும் வெறுப்புணர்வையும் தூண்டிவிடக்கூடியவை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு றிப்பீட்டர் துப்பாக்கிகளை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு இதன் ஒரு குறிகாட்டியாக இருக்கக்கூடும்.
துருவமயமாதலை குறைத்தல்
இனமோதலின் காரணமாக முன்னைய தேர்தல்களின்போது காணப்பட்ட துருவமயமாதலும் அச்சமும் வர்க்க மோதலின் வடிவத்தை எடுக்கக்கூடிய ஆபத்தே தற்போதைய தேர்தலின் துரதிர்ஷ்டவசமான அம்சமாகும். தேசிய மக்கள் சக்தி / ஜே.வி.பி. யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரா குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்திருக்கும் ஆதரவே இதற்கு காரணமாகும். பொருளாதார நெருக்கடியும் ” முறைமை மாற்றத்தை ” வேண்டிநின்ற போராட்ட இயக்கமும் மக்கள் மத்தியில் அவரின் கட்சிக்கு பேராதரவை வளர்த்திருக்கின்றன.
நாட்டை ஆட்சிசெய்துவரும் உயர் அரசியல் அதிகார வர்க்கத்துடனும் பெரும் வர்த்தக சமூகத்துடனும் அநுரா குமார தொடர்புகளைக் கொண்டிராதவர் என்பதால் மாற்றத்தை விரும்புகிறவர்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள். ஆனால் இது அவர் வெற்றிபெறும் பட்சத்தில் நடக்கக்கூடியவை பற்றி அச்சத்தை தோற்றுவிக்கிறது. ஜே.வி.பி.யில் தலைமைத்துவ பதவிகளில் இருப்பவர்களின் கடந்த கால மார்க்சியப் பின்னணியும் கடந்தகால வன்முறைகளின் நினைவும் இந்த அச்சத்துக்கு வலுச்சேர்க்கின்றன.
இன்னும் இரு வாரங்களில் ஜனாதிபதி.தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், துருவமயமாதல் மட்டமும் தேர்தலுக்கு பின்னரான நிலைவரம் குறித்து நிலவும் அச்சவுணர்வும் தணிவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் அக்கறை காட்டினால் அது வரவேற்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக, இன,மத சமூகங்களாக இருந்தாலென்ன, சமூக – பொருளாதார வர்க்கமாக இருந்தாலென்ன சனத்தொகையின் எந்த பிரிவினரும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படவோ மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதி செய்யவேண்டும்.
குற்றச்செயல்களுக்கு அல்லது ஊழல் மோசடிகளுக்கு தனிநபர்களை பொறுப்புக்கூற வைப்பது ஒரு விடயம், அதேவேளை கூட்டாக பொறுப்புக்கூற வைப்பது வேறு விடயம்.முன்னையது அவசியமானது. பின்னையது ஏற்புடையதல்ல.தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை மதிப்பதாகவும் எதிர்பாராமல் தோல்வியைச் சந்தித்தால் தங்களது ஆதரவாளர்கள் நாசகாரச் செயல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் வேட்பாளர்கள் சூளுரைக்கவேண்டியதும் அவசியமாகும். எதிர்காலத்துக்கு சிறந்த பாடங்களைப் புகட்டுவதற்கு கடந்த பல தசாப்தகால கூட்டுத் தவறுகள் எம்முன்னால் உள்ளன.
அதனால் தோல்வியடையும் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரைப் பொறுத்தவரை அவசியமான ஒரு பணியாகும். வெற்றி பெறுபவரின் விஞ்ஞாபனம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்கிற அதேவேளை அதில் கடந்த காலக் குற்றங்களுக்காக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பது ஒரு அங்கமாக இருக்கிறதோ இல்லையோ சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நாட்டின் நலன்களையும் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டவை. சமூகத்தின் சகல பிரிவினரையும் அரவணைக்கும் நல்லுணர்வுடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். எதிரணியில் உள்ளவர்களும் மதிக்கப்படுகின்றதும் அவர்களது கருத்துக்களும் அக்கறையுடன் கவனத்தில் எடுக்கப்படுகின்றதுமான ஒரு அரசியல் கலாசாரம் கட்டிவளர்க்கப்படவேண்டும். தங்களது ஆதரவாளர்களையும் வாக்கு வங்கிகளையும் பற்றி அல்லாமல் முதலில் நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற விவேகமும் தொலைநோக்கும் கொண்ட அரசியல்ஞானிகளே இன்று இலங்கைக்கு தேவைப்படுகிறார்கள், வெறும் அரசியல்வாதிகள் அல்ல.
கலாநிதி ஜெகான் பெரேரா