ஜே.வி.பி யின் மாற்றத்தில் ‘AKD’ வெற்றியின் “முன்னும் – பின்னும்”

  • ‘ 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்ட போது, அப்போதைய தலைவராக இருந்த சோமவன்ச அமரசிங்க, ஜே.வி.பின் தலைமைத்துவத்தை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்து விட்டு ஒதுங்கினார். இந்த மாற்றம் கட்சிக்குள் பதற்றங்களை ஏற்படுத்தினாலும் மூத்த தலைவரும் ஜே.வி.பியின் தற்போதைய பொதுச் செயலாளருமான ரில்வின் சில்வா சமநிலைப்படுத்தினார். இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே 2015 ஆம் ஆண்டில் ஜனதா சேவக கட்சி என்ற அரசியல் கட்சியை ஜே.வி.பி.யின் 4 ஆவது தலைவரான சோமவன்ச அமரசிங்க ஆரம்பித்தார்’

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மார்க்சிஸ சித்தாந்த கொள்கைகளை கொண்ட 55 வயதுடைய அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பின்தங்கிய வாழ்வாதாரத்தை கொண்ட மக்களின் மேம்பாட்டு உட்பட ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று பிரதான நோக்கங்களை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கவுள்ளதாக தனது பதவியேற்பின் போது அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

தெற்காசியாவில் மாலைத்தீவு மற்றும் பங்களாதேசத்தை தொடர்ந்து தற்போது இலங்கையிலும் நவீன அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளினால்  நாட்டை பொருளாதார சீர்குழைவுகளின் பாதாளத்திற்கு கொண்டு சென்ற பழைமைவாத அரசியல் கூட்டணிகளுக்கு எதிராக மக்கள் நிராகரித்தமையே இலங்கையில்  மார்க்சிஸ சித்தாந்த கொள்கைகளை கொண்ட மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) ஆட்சி மலர காரணமாகியுள்ளது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (சீன சார்பு) பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர 1965 ஆம் ஆண்டு  மே மாதம் 14 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் அறிவித்த ஜே.வி.பியிக் கொள்கைகள் மீதான ஈர்ப்பில் படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இவ்வாறாக இணைந்துக்கொண்ட இளைஞர்களுக்கு இரகசியமான முறையில் ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு காலக்கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதம் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிரான  போராட்டங்களில் ஈடுப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற சோமவன்ச அமரசிங்கவின் கீழ் ஜனநாயக ரீதியிலான அரசியல் இயக்கமாக ஜே.வி.பி மீள் கட்டியெழுப்பப்பட்டது. இதன் பின்னரே 1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஜே.வி.பி போட்டியிட்டது. அன்று தொடக்கம் இன்று வரை தேசியவாதம் சார்ந்த கொள்கையுடன் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஜே.வி.பி இணைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டது. அப்போதைய தலைவராக இருந்த சோமவன்ச அமரசிங்க, ஜே.வி.பின் தலைமைத்துவத்தை அநுரகுமார திசாசாயக்கவிடம் கையளித்து விட்டு ஒதுங்கினார். இந்த மாற்றம் கட்சிக்குள் பதற்றங்களை ஏற்படுத்தினாலும் மூத்த தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய பொதுச் செயலாளருமான ரில்வின் சில்வா சமநிலைப்படுத்தினார். இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே 2015 ஆம் ஆண்டில் ஜனதா சேவக கட்சி என்ற அரசியல் கட்சியை ஜே.வி.பி.யின் 4 ஆவது தலைவரான சோமவன்ற அமரசிங்க ஆரம்பித்தார்.

எவ்வாறாயினும் அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேசிய அரசியலில் செயல்பட்டாலும் மக்கள் அந்த கட்சியோடு பெரிதாக ஒட்டாது தூர விலகியே இருந்தனர். இதற்கு பிரதான காரணமாக ஜே.வி.பி யின்  கடந்த கால பின்னணியாகும். ஆயுத கிளர்ச்சிகள் மற்றும் வன்முறை கலாசாரம் என்பவற்றிலிருந்து விடுப்பட்டு முழு அளிவில் தன்னை ஜனநாயகவாதிகளாக நாட்டு மக்கள் முன்னிலையில் காண்பிக்க ஜே.வி.பி முற்பட்ட போதிலும் தனித்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பின்னடைவுகளையே கண்டது.

எனவே உள்ளிருந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி தனது உருவத்தை முழுமையாக மாற்றிக்கொண்டது. ‘சிவப்பு’ நிறம், ‘மணி’ சின்னம் என்பவற்றுக்கு பதிலாக ‘திசைக்காட்டி’ சின்னமாகவும் தேசிய மக்கள் சக்தி என்று தனது பெயரையும் ஜே.வி.பி மாற்றிக்கொண்டது. இந்த மாற்றம் தேசிய அரசியலில் பெரும் வெற்றிக்கும் வழிவகுத்துள்ளதை தற்போது அனைவராலும் உணர முடிகிறது. ஏனெனில் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி கதிரையில் அமர வைத்ததும் இந்த மாற்றம் தான்.

ஊழல் ஒழிப்பு, தொழிலாளர் வர்க்கத்திற்கும், அரசியல் மேலடுக்கு எதிர்ப்புக்கும் ஆதரவான பிரச்சாரம் மூலம் இளைஞர்களிடம் புகழ்பெற்ற அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவையும், முன்னாள் ரணில் விக்கிரமசிங்கையையும் தோற்கடித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலானது ஈராண்டுகளுக்கு முன்னர் நாடு எதிர்க்கொண்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியின் பின்னர் இடம்பெற்றமையினால் தேசிய அளவில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் முக்கியம் பெற்றிருந்தது.

‘இந்த வெற்றி எந்த ஒரு நபரின் தனிப்பட்ட சாதனை அல்ல, மாறாக நாட்டு மக்களின் கூட்டு முயற்சியின் விளைவு என்றும், மக்களின் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.  அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றி 50 வீதத்தை கடக்காத வெற்றி என்பதால், அடுத்த பொதுத் தேர்தல் சவால் மிக்கதாக அமையலாம்.  குறைந்தது 112 பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வெற்றிப்பெற வைக்க வேண்டியது அநுரகுமார திசாநாயக்க முன்னுள்ள சவாலாகும்.

தேசிய மக்கள் சக்தி சார்பான தற்போதைய மக்கள் அலை பொதுத் தேர்தலில் தொகுதி அரசியலில் எவ்வாறு அமையும் என்பது சற்று கடினமான விடயமாகும். அவ்வாறானதொரு நிலையில், தேசிய மக்கள் சக்தியுடனான மக்களின் ஈரப்பை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க செய்ய வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

பதவி விலகிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நாட்டின் பொருளாதார மீட்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் வழிமுறைகளின் கீழ் கடன்களை மறுசீரமைத்தும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய பொருளாதாரத்தை ரணில் விக்கிரமசிங்க சீர்ப்படுத்தியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிமுறைகளின் கீழான எதிர்கால பொருளாதார திட்டங்கள் அதே முறையில் முன்னெடுக்கப்படும் என்று  அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆனால் வரி வருமானத்தில் திருத்தங்கள் கொண்டு வர உத்தேசித்துள்ளாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இத்தகைய  திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதும், ஒப்பந்தத்தின் அடிப்படைகளை மாற்றுவது, நாட்டின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான முக்கியமான 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் நான்காவது தவணையை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தக் கூடும்.

இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய விடயங்கள் உள்ளன. அதாவது தேசிய மொத்த வருமானம் 15 வீதம் அல்லது அதனை தாண்டிய ஆரோக்கியமான புள்ளியில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாட்டின் வரவு – செலவு திட்டத்தை தயாரிக்கும் போது,  அரச வரவு – செலவு  அடிப்படை கணக்கில் 2.3 வீதம் மேலதிக இருப்பு காணப்பட வேண்டும்.

நாட்டில் எத்தகைய தேவைகள் காணப்பட்ட போதிலும் அரச செலவீணங்கள் தேசிய மொத்த வருமானத்தில் 13 வீதத்தை தாண்ட இயலாது. அதே போன்று நாட்டின் கடன் சுமை 2032 ஆம் ஆண்டு ஆகுகையில், மொத்த தேசிய வருமானத்தில் 95 வீதத்திற்குள் குறைக்கப்பட வேண்டும். நாட்டின் தேசிய வருவாயை தாண்டிய கடன் செலுத்துகை காணப்படுகின்றமையினாலேயே இந்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் வருடத்திற்கு கடன் மற்றும் கடனுக்கான வட்டி செலுத்துகை தேசிய மொத்த வருமானத்திலிருந்து 4.5 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக 2025 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தை தயாரிக்க சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலரை தரவேண்டும். அந்த தொகை கிடைக்கா விடின் வரவு – செலவு திட்டத்தை தயாரிப்பது சவாலாகி விடும். அதே போன்று உலக வங்கி 400 அமெரிக்க டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 300 அமெரிக்க டொலர்களையும் வழங்கவுள்ளது. இந்த நிதி கிடைத்தால் மாத்திரமே அடுத்த ஆண்டு நாட்டை சுமூகமாக நிர்வகிக்க முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது குறிப்பிட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ், நாட்டின் பணவீக்கம் குறைந்து,   வெளிநாட்டு கையிருப்பு மற்றும் உள்ளூர் நாணயம் வலுப்பெற்றாலும் பெரும் வரி சுமை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். இத்தகைய சூழலில் அநுரகுமார திசாநாயக்கவின் மிகப்பெரிய சவாலாக மக்களின் வாழ்வாதார செலுவகளை குறைப்பதும் தேசிய வருமானத்தை அதிகரிப்பதும் உள்ளது. இதற்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி வெற்றிப்பெற வேண்டும்.

 லியோ நிரோஷ தர்ஷன்