கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாய், உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆகிய கதையாய் தமிழ்த் தேசியம் சீரழிக்கப்பட்டு விட்டது. தேசியத்தைச் சீர்குழைத்தவர்களே இன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கத் துடிக்கின்றனர்.
தமிழ் அரசியல் பரப்பில் நஞ்சே மருந்தாகவும், கொலையாளியே மருத்துவனாகவும் உருவாகி காட்சியளிக்கும் களமாக தமிழர் தாயக்ததின் தேர்தல் அரசியல் களம் தோற்றமளிக்கிறது.
தமிழ்த் தேசியம் என்பது ஈழத் தமிழர்களை தீவுக்குள் பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம். ஆமைக்கு எப்படி அதன் ஓடு பாதுகாப்பு கவசமாக இருக்கின்றதோ அதே போலத்தான் இலங்கை தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு தமிழ்த் தேசியமே பாதுகாப்பு கவசம். தமிழ் மக்களுடைய பாதுகாப்பு கவசமாகிய தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டால் தமிழ் மக்கள் இலங்கை தீவில் இருந்து அழிந்து போய்விடுவர்.
தமிழ்த் தேசியம்
அந்த அடிப்படையில் தான் சிங்கள தேசம் திட்டமிட்டு தமிழ்த் தேசியத்தை அழிக்கும் செயல்முறையை சிங்கள அரசின் அரச இயந்திரத்தை கொண்டு கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்த் தேசியம் எதிரியால் மாத்திரமன்றி அரசின் கையாட்களாலும், வேடதாரிகளினாலும், நண்பர்களினாலுமே அதிகம் சீர்குழைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் பிரதான எதிரி பௌத்த சிங்கள பேரினவாத அரசு. அது தனது முதற்கொள்கையாக தமிழினத்தை அழிப்பதையே அதன் இலட்சியமாக வரித்துக் கொண்டுள்ளது.
தமிழினத்தை இந்த தீவில் இருந்து பூண்டோடு அகற்ற வேண்டும் என்பதுவே மகா வம்சம் என்கின்ற சிங்கள தேசத்தின் புனித நூலின் இலக்கு. அந்த அடிப்படையில் சிங்கள பௌத்த அரசினரின் பிரதான இலக்கு தமிழ்த் தேசியத்தை சிதைப்பது அதனை அது தனது செயல்களினால் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்த் தேசியத்தை அழிப்பதில் தமிழ் மக்கள் பரப்பில் இருக்கின்ற நண்பனின் வடிவில் உள்ள எதிரிகள் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த நண்பனின் வடிவில் உள்ளவர்கள் தமது ஆர்வக்கோளாறு மிகுதியாலும், அதிகப்பிரசங்கித்தனத்தாலும், அற்ப சொற்ப சலுகைகளின் ஈக்கப்பட்டு அவர்களை அறியாமலே தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதேநேரம் தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு என்று சிங்கள தேசத்தால் அனுப்பப்பட்ட வேடதாரிகள் தமிழ்த் தேசியத்தை அழிப்பதில் மோசமான பாத்திரத்தை வகித்தார்கள்.
தற்போது வகித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இந்த வேடதாரிகள் கல்விமான்கள் என்ற போர்வையிலும், சட்டத்தரணிகள் என்ற போர்வையிலும், தமிழர் தாயகத்திற்கு கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே அதிகம். இந்த வேடதாரிகள் தமிழர் தாயகத்தின் மண்ணோடும் மக்களோடும் வாழாதவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய வேதனையும், வலியும் புரியாதவர்கள்.
இனக்கலப்பு
சிங்கள தேசத்தில் ஒன்றி வாழ்ந்து பழக்கப்பட்டதனால் என்னவோ இனப்பற்றும் இல்லை. தன்மானமும் இல்லை. சுதந்திர உணர்வும் கிடையாது. வெரும் கடைந்தெடுத்த சுயநல பதவி பட்டங்களுக்காகவும், தன்முனைப்புக்காகவும் தமிழ்த் தேசிய அழிப்பை எந்தவித மன உறுத்தலும் இன்றி செய்கிறார்கள். அடுத்ததாக கையாட்கள், இவர்களை சிங்கள தேசத்தின் கைக்கூலிகள் என்றும் நம்மவர் அழைக்கின்றனர்.
இவர்கள் சிங்கள தேசத்திடமிருந்து பெறுகின்ற சலுகைகளுக்காகவும், ஊதியத்துக்காகவும் தங்கள் சிங்கள தேச எஜமான்களுக்கு சேவகம் செய்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத்தை சிதைப்பதன் மூலம் தமிழர்களை அழித்தொழித்து விடலாம் அல்லது தன்னினமயப்படுத்தி அதாவது இனமயமாக்கல் (Assimilation) செய்து விடலாம். நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையாக கரையோரப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் இன்று சிங்களவராக மாறி சிங்கள மயப்படுத்தப்பட்டு விட்டனர்.
அதேபோல ஒரு தொகுதியினர் சிங்கள இனக்கலப்புக்கு (Acculturation) உள்ளாக்கப்பட்டு விட்டனர். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தென் எல்லை கிராமங்கள் இப்போது சிங்களமயமாக மாற்றப்பட்டு விட்டது, இன்று உகந்தை முருகன் கோயிலின் நிர்வாகமும் அதனைச் சுற்றியுள்ளவர்களும் சிங்களமையப்பட்டு விட்டனர் என்ற உண்மையை தமிழர் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை படிமுறையில் சிங்களமையப்படுத்தும் செயல்திட்டத்தை எப்படி செய்யலாம் என்பதை. பௌத்த சிங்கள பேரினவாதம் நன்கே தெரிந்து வைத்துள்ளது. ஆதலால் தான் தமிழினத்திற்குள் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கல்விமான்கள் என்ற வடிவில் உள்ள தமிழினத்தின் கோடாலிக் காம்புகளை சிங்கள தேசம் எப்போதும் பாதுகாக்கிறது. அரசியல் அரங்கில் அவர்களை முன்னிலைப்படுத்துகிறது அவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குகிறது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்க தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்தெடுத்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க புதிய அரசியல் வடிவம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. கடந்த 76 ஆண்டு காலமாக மிதவாத அரசியல் கட்சிகளும் தலைவர்களும் நாடாளுமன்றம் சென்று மணிக்கணக்காக வாதாடியும், கர்ச்சித்து பேசியும், ஒப்பந்தங்களைச் செய்தும் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்கவில்லை.
மாறாக இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி நின்றவர்கள், பின்னாளில் அவர்களிடமிருந்து உடைந்து சமஸ்டி என்று கூறியும் அதன் பெயரால் கட்சியை அமைத்து அரசியல் நடத்தியவர்கள் சிங்களத் தலைவர்களோடு ஒப்பந்தம் செய்தபோது சமஸ்டியை கைவிட்டு பிராந்திய சபைக்குச் சென்று ஏமாற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த முறை தேர்தலில் வென்று தீர்வைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கை பெற்று தலைவர்களாயினர்.
ஜனாதிபதித் தேர்தல்
அதன்பின் சிங்களத் தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்குச் சென்ற போது பிராந்திய சபையில் இருந்து மேலும் கீழே இறங்கி மாவட்ட அபிவிருத்தி சபைக்கு வந்து அந்த ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட இறுதியாக மாவட்ட சபைக்கு வந்து கீழ் இறங்கி மாவட்ட சபையும் பெற முடியாமல் வட்டமேசை மகாநாடு நடத்தி கண்ட பலன் ஏதும் இல்லை.
இதனைத் தொடர்ந்து நேரடி ஆயுதப் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் சிந்திய ரத்தமும் உயிர்த்தியாகமும் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தின் உக்கிரமும் ஒரு பெயரளவிலான பிராந்தி அலகை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக் கொடுத்தது.
ஆனாலும் அது போதாது என்றே ஆயுதப்போரட்டம். அதனை எதிர்த்து வந்தது. ஆனால் மிதவாத அரசில் தலைமைகள் அதனை வைத்து தேனாறையும் பாலாறையும் ஓடவைத்திருக்கலாம் என்றனர்.
ஆயினும் அதைக் கூடச் சரியாகப் பயன்படுத்த வக்கற்ற மிதவாத அரசியல் தலைவர்கள் நல்லாட்சிக்கு போய் ஏமாந்தது மாத்திரமல்ல ஆயுதப் போராட்டம் இறுதியாக 2004இல் கட்டமைத்திருந்த தமிழ் தேசியத்தின் அரசியல் இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் 2009இற்கு பின்னர் தான்தோன்றித்தனமாக நடந்து உடைத்துச் சின்னாவிண்ணப்படுத்தி சீரழித்து விட்டார்கள்.
எனினும், இப்போது ஆரம்பத்தில் ஒற்றை ஆட்சியையே வலியுறுத்தியவர்கள் பின்னாளில் தனிநாடு அமைப்போம் என தமிழர் விடுதலை கூட்டணிக்குள் இணைந்தார்கள். பின்னர் ஆசன பங்கெட்டில் முரண்பட்டு கூட்டணிக்கு அல்வா கொடுத்துவிட்டு 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார்கள். பின்னர் 2004 தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது கூட்டமைப்புக்குள் அங்கம் வகித்தார்கள்.
பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு முதலில் வெளியேறிய கஜேந்திரகுமார் அணியினர் முன்னணியை உருவாக்கினார்கள் அவர்கள் இந்நாளில் தமக்குள் இரண்டாக உடைந்து இரண்டு அணியாக இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஒரு அணியினர் ஒரு நாடு இரு தேசம் என்கிறார்கள் மற்ற அணியினர் சமஸ்டி என்கிறார்கள் அடிப்படையில் இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதை மறைத்து தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு நாடு இரு தேசம் என்றால் தனி நாடு என்ற தோரணையில் தேர்தலில் முழக்கமிடுகிறார்கள்.
2009 முள்ளிவாய்க்கால்
மறுபுறத்தில் தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த அனைவரையும் கைவிட்டு தனது சின்னத்தை தூக்கிக்கொண்டு தனியே ஓடி தனித்துப் போட்டியிடப் போவதாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கொக்கரித்தது.
அத்தேர்தல் நடவாமல் போனபோது அமைதியாக இருந்து விட்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது பற்றி பேசிய போது சிங்கள தேசிய கட்சிகளோடு கூட்டுறவை வைத்துக்கொண்டு பொது வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்தது. இதன் விளைவினால் தமிழரசு கட்சிக்குள் பலர் வெளியேறினர். தற்போது சுயேட்சை குழுவாக போட்டியிடுகின்றனர்.
அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை சங்கு சின்னத்தின் கீழ் நிறுத்தி தேர்தலை எதிர்கொண்ட ஏழு அரசியல் கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற அணியாக தொடர்ந்தும் அதே சங்க சின்னத்துடன் நின்று தேர்தலைச் சந்திக்கின்றனர். இந்தத் தேர்தல் தாயகத்தின் பழைய கட்சிகள் மூன்றினதும் இறங்கு முகத்தையே தற்போது வெளிப்படுத்துகிறது.
இந்த நிலை தொடருமானால் இந்த மூன்று கட்சிகளும் அழிவடைவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மிதவாத தமிழ் கட்சிகளையும் தலைவர்களையும் கடந்த கால மக்கள் பிரதிநிதிகளையும் வெறுக்கின்ற ஒரு சூழல் அநுரகுமார திசாநாயக்காவின் வெற்றியினால் தோற்றம் பெற்றுள்ளது. புதிய முகங்கள் என்ற அலை தமிழர் தாயகத்தில் தோன்றி இப்போது வீச தொடங்கிவிட்டது. இப்போது தேர்தல் களத்தில் சமஸ்டி என்ற ஒற்றை சொல்லையே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் கோசமிடுகின்றனர்.
கடந்த காலத்தில் ஒற்றையாட்சியை வலியுறுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் சமஸ்டியையே கோருகின்றனர். சமஸ்டி என்றும் பின்னர் தனிநாடு என்றும் கோரிய தமிழரசு கட்சியும் விடுதலைக் கூட்டணியும் இப்போது சமஸ்டியையே கூறுகின்றனர். தமிழ் அரசியல் பக்கம் பாராமுகமாக இருந்த பின்னர் சடுதியாக தமிழ அரசியல் பரப்புக்குள் வந்த தலைவர்களும் இப்போது சமஸ்டியையே கோருகின்றனர்.
ஆயினும் இவர்கள் யாரிடமும் சமஸ்டியை பெறுவதற்கான வழிவரைபடம் இல்லை என்பதே உண்மையாகும். அப்படி இவர்களிடம் ஒரு சமஸ்டியை பெறுவதற்கான தந்திரோபாயம் ஏதேனும் அல்லது வழி வரைபடம் ஏதேனும் இருக்குமானால் அதனை தயவுசெய்து இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் முன் வையுங்கள் என்பதே சாமானிய ஒவ்வொரு தமிழனுடைய எதிர்பார்ப்பாகும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தளவில் 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழர் தரப்பில் விடுதலைப் போராட்டம் எதிர் புரட்சிகர வளர்ச்சியை அதாவது எதிர்க்கணிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தலைகீழ் வடிவத்தை பெற்றுள்ளது என்று சொல்வதே பொருத்தமானது. அதேவேளை சிங்கள தரப்பில் தமிழின ஒடுக்குமுறை புரட்சிகர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமானது. தமிழர் தரப்பில் இதுவரை ஒரு சாண் நிலத்தளவு உரிமைகூடப் பெற்றிருக்காது இன்று களத்தில் நிற்கும் கட்சிகளிடம் சமஷ்டியை எப்படிப் பெறப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு விடையுண்டா?
திபாஹரன்