- தற்போது 75 வயதாகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்புகளை வகித்து விட்டார். சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் அனுபவமுள்ளவராகவும் உள்ள அவர் இளையோருக்கு வழிவிட்டு சிறந்த அரசியல் ஆலோசகராக விளங்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடத்தே உள்ளது. ஆனால் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்கி ஆசனங்களைப் பெறுவதில் திட்டம் தீட்டி வருகின்றார். சஜித்துடன் இணைந்து செயற்பட கோரிக்கை விடுத்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பு தன்வசமே இருக்க வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தால் சஜித் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். எனினும் தனது சகாக்களை பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்து அநுரகுமாரவின் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் செற்பாடுகளில் அவர் ஈடுபடலாம் என தகவல்கள் கூறுகின்றன.
பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக முடியவில்லை. வரிசை யுகத்தை போக்கினார், நாட்டை வங்குரோத்து நிலைமைகளிலிருந்து மீட்டார், ரணிலை மீண்டும் தெரிவு செய்யாமல் போனால் மீண்டும் நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும் போன்ற மக்களை பயமுறுத்தும், குழப்பும் பிரசாரங்களை ரணிலுக்கு முட்டுக்கொடுத்த கட்சிகளும் அவரின் மூலம் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட தரப்புகளும் முன்னெடுத்துச்சென்றாலும் இறுதியில் மக்கள் சரியானதொரு தீர்ப்பை ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியுள்ளனர்.
ஆனால் ரணிலின் அதிகார வர்க்க உணர்வு அவரை இப்போதும் சும்மா இருக்கவிடாது அடுத்து என்ன செய்யலாம் என்ற தூண்டுதலை அவருக்கு கொடுத்து வருகின்றது என்று தான் கூற வேண்டும். தான் இனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லையென்றும் தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்றத்துக்கு வரப்போவதில்லையென்றும் அறிவித்துள்ள ரணில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆலோசகராக இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் கட்சியின் தலைமைத்துவ பதவியை அவர் யாருக்கும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சியானது ரணசிங்க பிரேமதாச உயிரோடு இருக்கும் வரை உயிர்ப்போடு இருந்தது எனலாம். அவருக்குப்பிறகு என்று ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் வந்ததோ, கட்சி மக்களிடமிருந்து வெகுதூரத்துக்கு சென்று விட்டது. சஜித் அணியினர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவுடன் ரணிலும் ஐக்கிய தேசிய கட்சியும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன.
ரணிலின் புகழ்பாடும் பலரும் அவரின் உறவினர்களில் சிலரும் மாத்திரமே கட்சியில் தற்போது உள்ளனர். நாட்டின் பாரம்பரிய கட்சியொன்றை சிதைத்த சீரழித்த பொறுப்பை ஏற்று, அக்கட்சியின் பழம்பெரும் ஆதரவாளர்களின் சீற்றத்துக்குள்ளாகி குற்றவாளி கூண்டில் நிற்கின்றார் ரணில்.
இலங்கை அரசியலில் பல குள்ளநரித்தனங்களை செய்தவர் என்ற பெருமை ரணிலுக்கு உள்ளது. அதை அவரது ஆதரவாளர்கள் ராஜதந்திரம் என்று கூறிக்கொள்கின்றனர். அவரின் பிரதான ராஜதந்திரமே கட்சிகளை உடைப்பது தான். அவருக்கு பாராளுமன்றில் ஆதரவாக செயற்பட்டு அவரை ஜனாதிபதியாக்கிய பொதுஜன பெரமுன கட்சியையே சிதறடித்த பெருமை அவருக்குண்டு.
2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலே அவரது அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் இறுதித் தேர்தலாக இருந்தது. ஏனென்றால் அவருக்கு தற்போது 75 வயதாகின்றது. இறுதியாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருந்து விட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம் என அவர் நினைத்து இம்முறை களமிறங்கினார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
ஆனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் குட்டையை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கப்போகின்றாரோ என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை தூக்கி நிறுத்தும் இறுதி முயற்சியில் ஈடுபட்ட அவருக்குத் தோல்வியே கிடைத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப்பிறகு அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்று யோசித்த அவர் சஜித் பிரேமதாசவுக்கு தூது அனுப்பிப் பார்த்தார்.
ரணிலின் சகாக்கள் சஜித் தரப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடலாமா என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அத்தேர்தலில் சிரேஷ்ட ஆலோசகராக தான் செயற்படுவேன் என ரணில் கூறியுள்ளார். ஆனால் சஜித் பிரேமதாசவோ கட்சியின் ஆலோசகராக இருந்தால் எதற்கு தலைமைப்பொறுப்பு? அதை தனக்கு தரும்படி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஆனால் கட்சியின் தலைமைப் பொறுப்பும் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவும் தன் வசமே இருக்கும் என ரணில் கறாராக கூறி விட்டார். இதையடுத்தே சஜித் எவருடனும் கூட்டணி இல்லையென்றும் நாம் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரிலேயே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருக்கின்றார்.
சஜித்துடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியாக போட்டியிடுவதற்கு பின்புலமாக பல திட்டங்களை ரணில் கைவசம் வைத்திருக்கின்றார். அதாவது தனக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த சுமார் 24 இலட்சம் வாக்குகள் சஜித்துக்குக் கிடைத்த 45 இலட்சம் வாக்குகளை கணக்கிட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மொத்தமாக நூறு ஆசனங்களையாவது பெறலாம் என கணக்கு போட்டிருக்கின்றார் ரணில். அதன் மூலம் பலமான எதிர்க்கட்சியாகவாவது இருந்து ஜனாதிபதி அநுரவுக்கு அழுத்தங்களை வழங்கலாம் என்ற நினைப்பு அவருக்கு இருந்திருக்கலாம்.
அல்லது அநுரவை செயற்பட விடாமல் பல தடைகளை பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க அவர் திட்டங்களை தீட்டியிருக்கலாம். எனினும் அது இடம்பெறவில்லை. இப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்குக் கிடைத்த ஆதரவை வைத்து எவ்வாறு அதன் மூலம் ஒரளவுச் சரி பாராளுமன்ற ஆசனங்களைப் பெறலாம் என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளார் ரணில். பல வருடங்களுக்குப்பிறகு யானை சின்னத்தில் களமிறங்கினால் மக்கள் ஆதரவு தருவார்களா என்ற சந்தேகமும் அவருக்குள்ளது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தன் பக்கமிருந்த சில எம்.பிக்களையும் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் அவருக்குள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் ஒரு வலதுசாரி முதலாளித்துவ வர்க்க சிந்தனையுள்ள அரசியல்வாதியாவார். அவருக்கு இடதுசாரி கட்சியொன்றின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியானமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்போதைய நாட்டின் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் மூலமே உதவிகள் கிடைத்துள்ளன. மூன்றாவது கட்ட உதவிகள் இனி ஆரம்பமாகும். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்து விட்டது.
இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளும் அநுர குமார திசாநாயக்கவோடு இணைந்து பயணிக்க தாயார் என அறிவித்து விட்டன. இது ரணிலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனினும் அவர் கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதமராகவும் , எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவிகளை வகித்த சிறந்த ராஜதந்திரியாக நோக்கப்படுகின்றார். எனவே இலங்கை அரசியலில் அவரது வகிபங்கு போதுமானது என்ற கருத்தே நிலவுகின்றது.
தான் தேர்தல்களில் போட்டியிடா விட்டாலும் தனது கட்சியை களமிறக்கி பின்புலமாக செயற்பட்டு அரசியல் குட்டையை குழப்ப ரணில் திட்டமிடுகிறார் என்றே தெரிகின்றது. பாராளுமன்றத்துக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்னும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியானது தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று நம்பலாம்.
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களோ 75 வயதாகும் ரணில் விக்கிரமசிங்க தனது தலைமைப் பொறுப்பை அடுத்த கட்ட தலைவரிடம் ஒப்படைத்து விட்டு கட்சியின் ஆலோசகராக வழிநடத்த வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகத் தெரிகின்றது. அப்பொறுப்புக்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாச என்று கருத்தும் நிலவுகின்றது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிகளோ ஐக்கிய தேசிய கட்சியோடு சஜித் இணைவதை விரும்பவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் தலைமை பொறுப்பை வழங்கி சஜித்தை இணைத்துக்கொண்டாலும் ரணிலின் மீது மக்களுக்குள்ள வெறுப்புணர்வால் தமது வெற்றி பாதிக்கப்படும் என அவர்கள் நினைப்பதாகத் தெரிகின்றது.
எது எப்படியானாலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட உள்ளதாகவே தெரிகின்றது.
சி.சி.என்