அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலமிட நடவடிக்கை!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சுங்கச் சட்டத்தின் கீழ் ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 வாகனங்கள் விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 625 வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் துறைமுகத்திலேயே தங்கியுள்ளன.

நாட்டில் தற்போது அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சந்தையில் ஏற்பட்ட தேவைக் குறைவு அல்லது பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இறக்குமதியாளர்களே இவற்றை விடுவிக்காமல் விட்டுள்ளனர். சுங்க விதிமீறல்கள் காரணமாக எந்தவொரு வாகனமும் தடுத்து வைக்கப்படவில்லை.

சுங்கச் சட்டத்தின் 109-வது பிரிவின்படி, பொருட்கள் துறைமுகத்திற்கு வந்து ஒரு மாதத்திற்குள் உரிய வரிகளைச் செலுத்தி விடுவித்துக் கொள்ளப்படாவிட்டால், அவற்றை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.

அவ்வாறு கிடைக்கும் தொகையிலிருந்து அரசுக்குச் சேர வேண்டிய வரிகளும் துறைமுகக் கட்டணங்களும் ஈடுசெய்யப்பட்டு, மீதித் தொகை இருப்பின் அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.

இருப்பினும், தகுந்த காரணங்களினால் வாகனங்களை விடுவிக்க முடியாமல் போனதாகவும், வரிகளைச் செலுத்தி இப்போது விடுவித்துக்கொள்ளத் தயார் என்றும் இறக்குமதியாளர்கள் கோரினால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், வாகனங்களின் எஞ்சின் மற்றும் சேசிஸ் எண்களைத் தனித்தனியாகப் பரிசோதித்து, குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த பின்னரே டெண்டருக்கு விடப்படும் என்பதால் இந்நடவடிக்கைக்குச் சற்று அவகாசம் தேவைப்படும்.

நாடு கடுமையான அந்நியச் செலவாணி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டுச் செலவாணியைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவராமல் துறைமுகத்திலேயே தேக்கி வைப்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அத்துடன், துறைமுகத்தின் நிலப்பரப்பு முடக்கப்படுவதால் துறைமுக நிறுவனமும் வருமானத்தை இழக்கிறது என்றார்.