அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அபிமானி ஜன ஜய கட்சி இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டியிருந்த 06 லட்சம் அமெரிக்க டொலர்கள் மாயமானமை மற்றும் திறைசேரி நிதி கையாடல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவிக்கையில், நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி மேலும் ஒரு தொகுதி பணம் வேறு சில தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவ்வாறான நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டின் நிதித்துறையில் இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவும் போது பொதுமக்கள் எவ்வாறு வங்கிகளை நம்பி தமது பணத்தை வைப்பு செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், திருடர்களைப் பிடிப்பதற்கான வேலைத்திட்டத்தை வெறும் 20 நாட்களில் முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஷாங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிதி விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தி, காணாமல் போன பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திறைசேரியில் இருந்த பணம் முறையற்ற வகையில் கையாளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்திற்கு மிக விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.




