இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு உளவியல் மற்றும் சமூக அபாயங்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவிக்கையில்,
தற்போது இணையவழி விளையாட்டுகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிமுகமற்ற நபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிலைமை உருவாக்கியுள்ளது.
இதனால், சிறுவர்கள் நீண்ட நேரம் ஒன்லைன் சூழலில் தங்கியிருந்து, அறிமுகமற்ற நபர்களிடம் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உருவாக்கி, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிரச்சினைகளைக் கூட பகிர ஆரம்பிக்கிறார்கள்.
மேலும், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களையும் அந்நியர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தச் செயலிகளில் விளையாட்டுகளுக்கான வயது வரம்புகள் மற்றும் உள்ளடக்க எச்சரிக்கைகள் காணப்பட்டாலும், அதனை கண்காணிக்கும் வீதம் குறைவாக உள்ளது.
PEGI வலைத்தளமான pegi.info வலையமைப்பில் “ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு வயதுப் பிரிவு உள்ளடக்கப்பட்டுள்ளதோடு பெற்றோர்கள் இந்த வலையமைப்பை கண்கானிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல இணையவழி விளையாட்டுகள் பரிசு மற்றும் வெகுமதி அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது சூதாட்ட மனப்போக்கைப் போன்ற அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடும்.
சில சிறுவர்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ. 4 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை இணையவழி விளையாட்டுகளுக்காக செலவழித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
அத்தோடு பெற்றொர்கள் இந்நிலையை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் போது சிறுவர்கள் கோபம், மன அழுத்தம் மற்றும் தாக்குதல் போன்ற மாற்றங்களுக்கு உட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி விளையாட்டுகளை முழுமையாக கட்டுப்படுத்துவது கடினமானதாயினும், பெற்றோர் கண்காணிப்பு, திரை நேர வரம்புகள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வே தற்போது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.




