எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் காதலர்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, காதலர்களை அச்சுறுத்திய சந்தேக நபர்களில் ஒருவர், அந்த யுவதியை பலவந்தமாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
மற்றொரு காதலர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் பல இளம் ஜோடிகளிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு சொத்துக்களை இவர்கள் அபகரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.




