வருடக்கணக்காக நிலவி வரும் பயண மற்றும் எரிபொருள் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளமையினால், இன்று (24) முதல் அனைத்து வெளிக்களக் கடமைகளில் இருந்தும் விலகி தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எமது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் அனைத்துக் கிராம உத்தியோகத்தர்களும் பொது விடுமுறை அறிவித்து பாரிய பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டணியின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அடிமட்டத்திலே பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் 236 கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக, 130க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து கடமையாற்றுகின்றனர். மாதாந்தம் சுமார் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் இவர்களுக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 600 ரூபா பயணக் கொடுப்பனவே இன்னமும் வழங்கப்படுகிறது. தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தால் இவர்களுக்கு மாதாந்தம் 10,000 முதல் 15,000 ரூபா வரை சொந்தப் பணம் செலவாகிறது.
2024இல் 20 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும், அது இன்னமும் காகித வடிவிலேயே உள்ளது. தற்போது இதனை சம்பள ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாகக் கூறுவது எமக்கான கொடுப்பனவை இழுத்தடிக்கும் தந்திரமே அன்றி வேறில்லை.
எமது சொந்தப் பணத்தைச் செலவழித்து அரச கடமைகளை இனிமேலும் தொடர முடியாது. எனவே, ஆணைக்குழுவின் இறுதி முடிவு கிடைக்கும் வரை அனைத்துக் கிராம உத்தியோகத்தர்களும் வெளிக்களக் கடமைகளில் இருந்து முற்றாக விலகியிருப்பார்கள். குறிப்பாக, திங்கட்கிழமைகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி நாள் முழுவதும் தடுத்து வைக்க முயலும் பிரதேச செயலகங்களுக்குச் செல்வதை இன்று முதல் முற்றாகப் புறக்கணிப்போம். அதற்குப் பதிலாக, மாதாந்தம் இரண்டு தடவைகள் மாத்திரமே தமக்கு வசதியான நாட்களில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க பிரதேச செயலகங்களுக்குச் செல்வதோடு, அரசியல் தேவைகளுக்கான எவ்வித ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் புறக்கணிப்போம்.
அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் பொது விடுமுறை அறிவித்து, முழுமையான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இருப்பினும், பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டு, நீதிமன்றக் கடமைகள், டெங்கு ஒழிப்புப் பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் போன்ற அத்தியாவசியக் கடமைகளை நாம் பொறுப்புடன் மேற்கொள்வோம்.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் நாம் பல கடிதங்களை அனுப்பிய போதிலும், எதற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது தோள்களில் தட்டி, ‘மூன்று மாதங்களில் பிரச்சினையைத் தீர்ப்பேன்’ எனக் கூறிய ஜனாதிபதி, இன்று ஒரு கலந்துரையாடலைக் கூட வழங்க மறுக்கின்றார். இத்தகைய சூழ்நிலையில், ‘ஜனாதிபதி அவர்களே, நீங்கள் கிராம உத்தியோகத்தர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா?’ என்றே எமக்குக் கேட்கத் தோன்றுகிறது என்றார்.





