‘ஹரக் கட்டா’ மற்றும் ‘மிதிகம ருவன்’ உட்பட ஐவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் தொடர்பாக, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் ஜயசேகர விதானகே ருவன் சாமர எனப்படும் ‘மிதிகம ருவன்’ உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான பிரதிவாதிகளான ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘மிதிகம ருவன்’ ஆகியோர் பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புப் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது பிரதிவாதிகளுக்கு கடுமையான உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, இனிவரும் வழக்குத் தவணைகளுக்காக அவர்களை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டார்.

அதற்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் அவர்களை இணையவழி முறையூடாக வழக்கு விசாரணைகளில் இணைத்துக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை வாசித்துக்காட்டப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா முதற்கட்ட ஆட்சேபனையொன்றை முன்வைத்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுடன் ஒத்துப்போகவில்லை என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும், வழக்க்தரப்பான சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரசாங்க சட்டத்தரணி சசிந்த பண்டார, பிரதிவாதி தரப்பின் ஆட்சேபனைகளுக்கு எவ்வித சட்டபூர்வமான அடிப்படைகளும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

பிரதிவாதிகளை தடுத்து வைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இதற்கு முன்னர் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தினால் கூட நிராகரிக்கப்பட்டுள்ளதை அரசாங்க சட்டத்தரணி நினைவு கூர்ந்தார்.

இருதரப்பு விவாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, முதற்கட்ட ஆட்சேபனை மீதான உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அறிவிப்பதாக குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின்படி, இந்த குற்றச் சதித் திட்டம் 2023 ஏப்ரல் 01 ஆம் திகதிக்கும் செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், ‘ஹரக் கட்டா’ தப்பியோடுவதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலேயே கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் கொஸ்தாபல்களான முனிபாலகே ரவிந்து சந்தீப குணசேகர மற்றும் எல்லாலகொட மத்துமகே தினேஷ் தரங்க ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமையாகும்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வாவுடன் சட்டத்தரணிகளான சஞ்சய ஆரியதாஸ மற்றும் உதுல் பிரேமரத்ன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.