சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து இதே மட்டத்தில் நீடித்தால், அதன் நன்மைகளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு வழங்க அரசாங்கத்துக்கு முடியுமாகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் எந்தவொரு நோக்கமோ அல்லது எண்ணமோ அரசாங்கத்திற்கு இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமான நிலை ஏற்பட்டவுடன் அதனை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
உலகயாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அதனால் எமது நாட்டிலும் எரிபொருட்களின் அதிகரித்ததுடன் ஏனைய பொருட்களின் விலைகளும் ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மக்களின் சுமையைக் குறைப்பதற்காக, அரசாங்கம் ஏற்கனவே ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாவும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாவும் நிவாரணமாக வழங்கி வருவருகிறது.
அத்துடன் சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போல எரிபொருளை உடனடியாக கொள்வனவு செய்ய முடியாது. எரிபொருளை முன்கூட்டியே இணங்கப்பட்ட விலைகளின் அடிப்படையில், முறையான விலை விமனு நடைமுறைகளைப் பின்பற்றியே கொள்வனவு செய்ய வேண்டும்.
அதனால், உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்ததுடன் அதன் நன்மையை உடனடியாக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை. தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து இதே மட்டத்தில் நீடித்தால், அதன் நன்மைகளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு வழங்க அரசாங்கத்துக்கு முடியுமாகும் என்றார்.





