மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மிகவும் இன்றியமையாதது. இந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவை சேர்ந்த மக்களே.
சமூகநீதிக் கொள்கை
அவர்களை பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணியமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும். முந்தைய காலத்தில் தனியார் நிறுவ
னங்கள் தூய்மைப் பணியாளர்களை சட்டப்பூர்வமாக ஒப்பந்த முறையில் சுரண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையை புறக்கணித்தனர்.
இயந்திரமயமாக்கல்
தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களைப் படிப்படியாக அந்தப் பணியிலிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகளை வழங்குவதும், தூய்மைப் பணியில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதும், இயந்திரமயமாக்குவதும், அவசியம்.
எனவே தற்போதைய புதிய அரசு தனியார்மயமாக்கலுக்கு முடிவு கட்ட வேண்டும். மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.





