ஒப்பந்தப் பிரச்சினையினால் காலதாமதமாகியுள்ள கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான கடற்கரை வீதியின் சீரமைப்பு வேலைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால் முன்மொழியப்பட்ட குறித்த தீர்மானம் உரியதரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுமென முல்லைத்தீவுமாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான உபகுழுக்கூட்த்திலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரைக்குமான கடற்கரைவீதி மாகாணசபைக் காலத்தில் என்னால் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக அப்போது வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒருபகுதி சீரமைப்புச் செய்யப்பட்டது. மிகுதி வீதி சீரமைப்புச் செய்யப்படாமல் காணப்படுகின்றது.

தற்போது அந்தவீதியானது, வீதி அபிவிருத்தி அதிகாரசபையியிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
அந்தவீதியை மீனவர்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக 4000ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர். எனவே அவ்வீதியை சீரமைப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றார்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சார்ந்த பொறியியலாளர்கள் இதன்போது பதிலளிக்கையில்,
ஒருங்கிணைக்கப்பட்ட வீதி (iRoad) முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட வீதிச் சீரமைப்புப் பணிகள், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் உள்வாங்கப்பட்டன.
அந்தவகையில் குறித்த கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான சீரமைக்கப்படவேண்டிய மிகுதி வீதியும் ஒருங்கிணைக்கப்பட்ட வீதி (iRoad) முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
அந்தவகையில் குறித்த கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான கடற்கரை வீதியை சீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது.
அதில் குறைந்த ஒப்பந்தத் தொகையினைக் கோரிய ஒப்பந்த நிறுவனம் இந்த சீரமைப்பு வேலையைச் செய்வதற்குத் தெரிவுசெய்யப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பிறிதொரு ஒப்பந்த வேலையில் முறையற்ற வித்தில் செயற்பட்டமைக்காக தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த வேலையை வழங்கமுடியாதென ஆசிய அபிவிருத்தி வங்கி மறுப்புத் தெரிவித்ததால் அந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது.
இத்தகைய சூழலில் குறித்த கைவிடப்பட்ட வீதிச்சீரமைப்பு வேலைத்திட்டத்தை பிறிதொரு உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டின்மூலம் உள்வாங்குவதற்கும், மீண்டும் ஒப்பந்தப்புள்ளியை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்களால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தப் பிரச்சினையினால் தாமதமாகியுள்ள கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான கடற்கரை வீதியின் சீரமைப்பு வேலைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கூட்டத்தில் தீர்மானமொன்று முன்மொழியப்பட்டது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்மொழியப்பட்ட குறித்த தீர்மானம் உரியதரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுமென இதன்போது முல்லைத்தீவுமாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


