நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க நாம் முயற்சிக்கிறோம். அவரைப் பற்றிப் பயப்பட வேண்டாம், அவர் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அந்த அறுவை சிகிச்சையை 65 வயதில் செய்திருந்தால் 75 வயதில் ஓய்வு பெற்றிருப்பார். அதனால் இன்னும் 20 வருடங்களுக்கு இலங்கை பாதுகாப்பாக இருக்கும் என்று என்னால் பயமின்றிச் சொல்ல முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.South Asians & Diaspora
தேசிய சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த லலித் அத்துலத் முதலியின் 33ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று கொழும்பு துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
திறைசேரியில் ஒரு பாரிய கொள்ளை நடந்திருக்கிறது. இது இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதனை அனுமதிப்பதற்கு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும். ஏனெனில், ஒருமுறை கொடுத்த பணத்தை மீண்டும் இரண்டாவது முறையாக வழங்க முடியாது. மீண்டும் 2.5 மில்லியன் டாெலர்களை வழங்குவதா இல்லையா என்று கேட்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டியுள்ளது. இன்று பேசப்படுகின்ற ஊழல் பற்றித்தான் நான் இப்போது கூறினேன்.
இதனால்தான் நாம் ஒரு தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அவ்வாறு இல்லையெனில், இரு பிரிவுகளாகப் பிரிந்து அடித்துக் கொள்வதைத் தவிர வேறு முன்னேற்றம் இருக்காது.
இங்கும் பல தொழிற்சங்கத் தலைவர்கள் இருக்கிறீர்கள், அது மிகவும் நல்லது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே துறைமுகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் துறைமுகத்திற்கு என்ன நடக்கும் என்று தெரியாது.
ஏனெனில், சர்வதேச அரசியலோடு நாம் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். அது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய இடம் கொழும்பு துறைமுகமாகும். ஒரு முதலீட்டாளர் வரும்போது, சர்வதேச அரசியலை நாம் அவதானமாகப் பார்க்க வேண்டும்.நாம் அவதானமாகச் செயற்படாவிட்டால் ஒரு தேசமாக ஆபத்தைச் சந்திப்போம்.
அதேநேரம் யாரையும் திட்ட வேண்டாம், திட்டிப் பயனில்லை. இப்போது இந்த அரசாங்கத்திலுள்ள பிள்ளைகளையும் திட்ட வேண்டாம். அவர்களுக்குத் தெரிந்ததைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் 65-70 வருடங்களாகத் தங்களுக்குத் தெரிந்ததைச் செய்தார்கள். அதாவது சுவர்களில், போஸ்டர்களை ஒட்டுவது போன்ற விடயங்களை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைத்தானே செய்வார்கள்?
இப்போது அந்தப் பிள்ளைகள் அழகான ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டால், அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம். 30, 40 வருடங்கள் காட்டில் இருந்தவர்கள் ஒரு வீட்டைக் கட்டுவது எவ்வளவு நல்லது? அது தவறல்ல. அவற்றைத் திட்டி, சண்டையிட்டு, அவதூறு பேசப் போகாதீர்கள். அப்படிச் செய்தால் எம்மால் இந்தப் பயணத்தைத் தொடர முடியாது. எமக்கு அனைவரும் தேவை. அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில் ஒரு தேசமாக நாம் ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
அதனால்தான் நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க நாம் முயற்சிக்கிறோம்.அவரைப் பற்றிப் பயப்பட வேண்டாம், அவர் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அந்த அறுவை சிகிச்சையை 65 வயதில் செய்திருந்தால் 75 வயதில் ஓய்வு பெற்றிருப்பார்.
இப்போது 77 வயதில்தான் அது நடந்தது. இப்போது 87 அல்ல 97 வயது வரை, இன்னும் 20 வருடங்களுக்கு இலங்கை பாதுகாப்பாக இருக்கும் என்று என்னால் பயமின்றிச் சொல்ல முடியும். இவற்றைச் சொல்லும்போது சிலர் என்னை திட்டுவார்கள், திட்டிப் பயனில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் திட்டட்டும். நாடு பாதுகாப்பாக இருந்தால் யார் திட்டினாலும் எனக்குப் பரவாயில்லை என்றார்.




