நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் அபாயத்தை தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க நிதிப் பற்றிய குழு வியாழக்கிழமை (02) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போது நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார மேம்பாட்டை கருத்திற் கொண்டு பல விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.பொருளாதாரத்துக்கு நேரடியாக செல்வாக்குச் செலுத்தும் துறைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
மாறிவரும் உலக நடப்புக்கு அமைய நிதிசார்ந்த சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இலத்திரனியல் முறைமை ஊடாக திருட்டுக்கள் மற்றும் தாக்குதல்கள் உலகளாவிய மட்டத்தில் தீவிரமடைந்த போக்கு காணப்படுகிறது.
நவீன சவால்களை வெற்றிக் கொள்வதற்கு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் அபாயத்தை தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தவறான நிதி பரிமாற்றங்களினால் நாடு கறுப்பு பட்டியில் உள்வாங்கப்பட்டால் அது பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.





