காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பலில் இயந்திரக் கோளாறு ; நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று நேற்று (8) இரவு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கப்பலில் பயணித்தவர்கள் பல மணிநேரம் நடுக்கடலில் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அதன் பின்னர், இந்திய அதிகாரிகள் மற்றும் அங்குள்ள மீனவர்கள் சிலரால் கப்பலும் அதில் பயணித்தவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 144 பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இக்கப்பல் புறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 4 மணிநேரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு நேரமாகியும் கரை சேராததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்லார் பகுதிக்கு அருகே சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கப்பல் பயணித்தபோது, கப்பலின் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கடலில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கப்பல் நடுக்கடலிலேயே பல மணிநேரம் தத்தளித்ததை தொடர்ந்து, தகவலறிந்த இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மற்றொரு கப்பலின் உதவியுடன் பழுதடைந்த கப்பல் மெதுவாக இழுத்துச்செல்லப்பட்டு, இரவு 10:45 மணியளவில் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது.

இந்த படகில் பயணித்த 144 பேரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இயந்திரக் கோளாறுக்கான காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பயணிகள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கப்பல் சேவை, இந்தப் பாதிப்பினால் நேற்று சில மணிநேரங்கள் தாமதத்தை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.