சிறைச்சாலை பிரச்சினைக்கு நீதித்துறை மாற்றங்கள் அவசியம் – ராஜித்த சேனாரத்ன

சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றங்களில் பிணை வழங்குவது தொடர்பான கடுமையான கொள்கையை கைவிட வேண்டும் என்பதுடன் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, நீதிமன்றங்களின் வெற்றிடங்களை வைத்துக்கொண்டு, அவர்களின் சேவைக்காலத்தை நீட்டிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழுமு்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் கூட்டு எதிர்க்கட்சி திங்கட்கிழமை (03) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தெளிவான கொள்கை ஒன்றுக்கு வர வேண்டும். முதலாவது, இந்தப் பிணை வழங்குவது தொடர்பான கடுமையான கொள்கையைக் கைவிடுதலாகும். இரண்டாவது, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்புதலாகும். மாறாக, நீதித்துறையில் நீதிபதிகளின் வெற்றிடங்களை வைத்துக்கொண்டு, அவர்களின் சேவைக்காலத்தை நீட்டிப்பதன் மூலம் இந்த வழக்குகள் முடிவடையப்போவதில்லை.

எமது நாட்டின் சட்டத்தின்படி, குற்றவாளிக்குப் பிணை வழங்குவதே வழக்கமான விதிமுறையாகும். அதாவது சாதாரண சட்டத்தின்படி பிணை வழங்கப்பட வேண்டும். எனவே, பிணை வழங்கப்படாமை என்பதே விதிவிலக்காகும். ஆனால், எமது நீதிமன்றங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறை என்னவென்றால், பிணை வழங்கப்படாமையே சாதாரணமானதாகிவிட்டது. இதன் விளைவாக சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

அத்துடன் இந்தச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு முக்கியப் பிரச்சினையாக இருப்பது, அங்கு காணப்படும் நெருக்கடியாகும். உண்மையில் அங்கு 18,500 பேர் வரை போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகள் கிடைக்காமையாகும். அத்தகைய அறிக்கைகள் கிடைக்காததால் அவர்களுக்குத் தொடர்ந்து பிணை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதில்லை. எனவே, இந்தக் காரணங்களினால் அங்கு தாமதம் ஏற்படுகிறது.

அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் உண்மையில் பெருமளவான வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்கள் காரணமாகவே பரிசோதனை அறிக்கைகள் வருவதில்லை.

அதனால் இந்த நெரிசலைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அரசாங்கம் தெளிவான கொள்கை ஒன்றுக்கு வர வேண்டும். முதலாவது, இந்தப் பிணை வழங்குவது தொடர்பான கடுமையான கொள்கையைக் கைவிடுதலாகும். இரண்டாவது, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்புதலாகும். மாறாக, நீதித்துறையில் நீதிபதிகளின் வெற்றிடங்களை வைத்துக்கொண்டு, அவர்களின் சேவைக்காலத்தை நீட்டிப்பதன் மூலம் இந்த வழக்குகள் முடிவடையப்போவதில்லை.

ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் நான்கு வெற்றிடங்கள் உள்ளன, அதேபோல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு வெற்றிடங்கள் உள்ளன, இன்னும் சில நாட்களில் அது ஐந்தாகப் போகிறது. எனவே, கீழ் நீதிமன்றங்களிலும் பெருமளவான வெற்றிடங்கள் உள்ளன. இந்த நிலைமையின்படி, வெறும் இரண்டு நீதிமன்றங்களில் மட்டும் நீதிபதிகளுக்குச் சேவை நீடிப்பு வழங்குவதன் மூலம் மாத்திரம் இந்தப் பிரச்சினைக்கு எவ்விதத்திலும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. இது வயிற்றுப்போக்குக்கு கோமணம் கட்டுவது போன்ற ஒரு செயலாகும்.

மேலும் சிறைச்சாலை பிரச்சினை, ஒரு பாரிய பிரச்சினையாகும். ஏனென்றால், தற்போது ஒரு சிறைச்சாலையில் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மாதத்திற்குள் அது மற்றுமொரு சிறைச்சாலைக்கு பரவுகிறது. இதன் உள்ளே ஒரு சிவில் நிலைமை உருவாகிறது. அதற்கு முக்கியக் காரணம் சிறைச்சாலைகளுக்குள்ளே குறைந்தபட்ச மனித உரிமைகள் கூட இல்லை என்பதாகும். நானும் சிறைச்சாலையில் இருந்த ஒரு நபர் என்ற அடிப்படையில் கண்ணால் கண்ட ஒரு விடயம் என்னவென்றால், அங்கே அந்த இளைஞர்கள் சாடின் டின்னில் மீன்கள் நெரித்து வைக்கப்பட்டுள்ளதைப் போன்றே இருக்கிறார்கள். இரவில் நித்திரைக்கு சென்றால் அவர்களால் ஒரு பக்கமாகக்கூடத் திரும்ப முடியாது.

எனவே, காலை வேளையில் மலசலக்கூடக் கட்டமைப்பு பாரியதொரு நெருக்கடியாகும். உள்ள மலசலக்கூடங்களின் எண்ணிக்கையானது எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. இந்த நிலைமையின் கீழ் இந்தக் கைதிகள் மிகவும் மனிதாபிமானமற்ற சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். இந் நிலையை பொறுத்துக்காெள்ள முடியாத நிலை ஏற்படும்போதே அது வன்முறையாக வெடிக்கிறது. இது ஒரு சிறைச்சாலையில் ஆரம்பித்து தற்போது இரண்டாவது சிறைச்சாலைக்கு சென்றுள்ளது இன்னும் எத்தனைக்கு பரவும் என்று தெரியாது. சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளே இந்த நிலைக்கு காரணமாகும்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றபோதும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு விடயத்துக்கும் இதுவரை அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டதில்லை என்றார்.