‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்து விட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்ப இன்று (நேற்று) காலையில் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்துள்ளது.
நாளை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினட் தகுதிபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்து விடுவோம்’ என்று நீதிமன்றத்தில் தவெக அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.
விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே நடத்தலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? ‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி.
உதயநிதி, தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை.யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதை சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும்.
உதயநிதி தவறுதலாகப்பேசுபவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம்வரும் முதல்வர், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த்ரிஷா பிரதமரா அல்லது முதல்வரா? – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசும்போது கூட்டத்தில் இருந்து யாரோ த்ரிஷாவை குறிப்பிட்டு, ‘அவர்கள் வீட்டில் மட்டும் தண்ணீர் வருகிறதா?’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?. த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதல்வரா? அவரே தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லையே. தஞ்சையில் விவசாயிகள் பட்டினியில் சாகிறார்கள்.
அதைப் பற்றி கவனிப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு நேரமில்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன், எங்கள் உதயநிதி ஸ்டாலினை இன்றைக்கு ‘இளைய கலைஞர்’ ஆக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.





