செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இம் மாதம்-27 ஆம் திகதி மீள ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 தினங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கடந்த செப்டெம்பர் மாதம்- 06 ஆம் திகதியுடன் நிறைவுபெற்ற நிலையில் சுமார் எட்டு மாத காலத்துக்குப் பின்னர் அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டப் பணிகள் இம் மாதம்-27 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (21.04.2026) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மீளவும் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னதாக இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 240 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 239 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.  இந் நிலையில் பருவமழை மற்றும் மழை வெள்ளம் காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேலும் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் குறித்த பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதற்கென எட்டுவார காலப் பகுதி தேவையெனவும் யாழ்.மாவட்டச் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவநாதன் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தமைக்கு அமைவாகச் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.