ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தலைமை நீதிபதியான கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விடுமுறையில் இருந்தமையினால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக இதனை எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இஸ்லாமிய மதத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.