பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள், எந்தவொரு பொருட்களையும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யாமல் 190 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு வெளியில் அனுப்பியுள்ளமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்த மோசடி தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் முன்னர் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அந்த விசாரணைக் காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, நெக்ஸ்ட் ஜென் என்ற நிறுவனத்தின் ஊடாக இயக்கப்பட்ட தந்தி பரிமாற்ற முறையின் மூலம் பில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே ஆரம்பத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள் இந்த மோசடி ஊடாக 190 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறியே இப்பணம் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அவ்வாறான பொருட்கள் எதுவும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட அந்த 89 நிறுவனங்களில் 36 நிறுவனங்கள் குறித்து பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், பலர், மோசடியான முறையில் தங்களை உரிமையாளர்களாகக் காட்டிக்கொண்டு, தொடர்புடைய நிறுவனங்களையும் வங்கி கணக்குகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
அத்துடன், அந்த நிறுவனங்களின் பெயர்களில் மாத்திரம் 10,151 பணப்பரிமாற்றங்கள் ஊடாக சுமார் 75 பில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களால் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணமும் இந்த சட்டவிரோத செயன்முறையின் ஊடாகவே சலவை செய்யப்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, ‘கொண்ட ரஞ்சி’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்த பணம், ‘வெலி சந்தன’ எனப்படும் நபருக்குச் சொந்தமான கணக்கிலிருந்து ‘ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்’ என்ற நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தின் ஊடாக 6 மில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு வெளியில் அனுப்பப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி பெரேரா சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், அவர் கைது செய்யப்படும்போது அவரிடம் 1 மில்லியன் ரூபா பணம் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




