புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களும் போதைப்பொருள், ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் எனக் கூறுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான தயக்கத்தினை காட்டி நிற்பதையே நாங்கள் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்துக்கான கட்டட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்றது.
ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் பூசகரின் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு வழிநடத்தல்களுக்கு உள்ளாகிவரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் இளைஞர்களை எமது சமூக கலாசாரங்களை பாதுகாக்கக்கூடியவர்களாக எதிர்காலத்தில் எமது பகுதிகளை கட்டியமைப்பவர்களாக தலைமைத்துவம் உள்ளவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு ஆலயங்களுக்குள்ளது.
நாங்கள் எமது பிரதேசத்தில் தமிழ் மக்கள், எமது அரசியல் தலைமைகள் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தினையும் சமயத்தினையும் வழிநடத்தவேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது.
கடந்த ஆண்டு எமக்கான வரவு – செலவு திட்டத்தின் நிதிகள் ஒதுக்கப்படாதபோதிலும் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்தினையும் சமயத்தினையும் வளர்ப்பதில் ஆலயங்கள் பங்களிப்பு செய்துவந்துள்ளன. தொடர்ந்து அதனை முன்னெடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்து மதகுருமார் மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், செங்கலடி பிரதேச சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமூக சேவகரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









